குட்கா முறைகேடு வழக்கு: கூடுதல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய சிபிஐக்கு கூடுதல் கால அவகாசம்

பிழைகளை முழுமையாக திருத்தி ஜனவரி 10 ஆம் தேதி தாக்கல் செய்ய சிபிஐக்கு சென்னை சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2022-12-15 08:04 GMT

சென்னை,

குட்கா முறைகேடு வழக்கு தொடர்பாக குட்கா கடை உரிமையாளர்கள், அரசு அதிகாரிகள், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட பலர் மீது சிபிஐ அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில் இந்த குட்கா ஊழல் தொடர்பாக திமுக தரப்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இந்த வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்றி உத்தரவிட்டது. இந்த வழக்கில் கிடங்கு உரிமையாளர்கள் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில்முருகன், மத்திய கலால்துறை அதிகாரி நவநீத கிருஷ்ண பாண்டியன், சுகாதாரத்துறை அதிகாரி சிவக்குமார் ஆகிய 6 பேர் கடந்த 2016 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் வெளி வந்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கில் சிபிஐ போலீஸார் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அதில் கைது செய்யப்பட்ட மாதவராவ் உள்ளிட்ட 6 பெயர்கள் மட்டுமே இடம் பெற்றிருந்தது. அமைச்சர் மற்றும் டிஜிபி என வேறு யாருடைய பெயர்களும் அந்த குற்றப்பத்திரிகையில் இடம்பெறவில்லை.

இதனிடையே முன்னாள் அமைச்சர்கள் பி.வி.ரமணா, சி.விஜய பாஸ்கர், முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன், சென்னை முன்னாள் போலீஸ் ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்ட மத்திய, மாநில அரசு அதிகரிகள் உள்ளிட்ட 11 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தமிழக அரசு கடந்த ஜூலை 19 ஆம் தேதி அனுமதி வழங்கியது.

இதைத்தொடர்ந்து, இந்த வழக்கு கடந்த முறை சென்னை சிபிஐ நீதிமன்ற நீதிபதி மலர் வாலண்டினா முன்பு விசாரணைக்கு வந்தபோது, சிபிஐ தரப்பில் 11 பேருக்கு எதிராக கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அந்த கூடுதல் குற்றப்பத்திரிகையில் பல்வேறு தவறுகள் இருந்ததால் அதனை திருத்தம் செய்தும் சாட்சிகள் குறித்த விபரங்கள் மற்றும் அவர்களின் வாக்குமூலம் குறித்த விபரங்களை இணைத்து தாக்கல் செய்ய விசாரணை அதிகாரிக்கு நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, இது வரை 7 பேருக்கு எதிராக வழக்கை நடத்த மட்டுமே மத்திய-மாநில அரசுகளிடம் அனுமதி பெற்றிருப்பதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட கூடுதல் குற்றப்பத்திரிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்த பிழைகளை முழுமையாக திருத்தி தாக்கல் செய்ய வேண்டும் எனவும் யார் யாருக்கு எதிராக வழக்கை நடத்த அனுமதி பெறப்பட்டுள்ளது என்பது குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜனவரி 10 ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.

இதனிடையே இந்த வழக்கிற்கு தொடர்பில்லாமல் முடக்கப்பட்ட அசையா சொத்துக்களை விடுவிக்க வேண்டுமென குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. வழக்கின் திருத்தப்பட்ட கூடுதல் குற்றப்பத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்யாததால், சொத்துக்களை விடுவிக்க கோர்ட்டு மறுத்துவிட்டது.  

Tags:    

மேலும் செய்திகள்