குட்கா பதுக்கி விற்ற 2 கடைகளுக்கு சீல்
நல்லம்பள்ளி அருகே குட்கா பதுக்கி விற்ற 2 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
நல்லம்பள்ளி:
நல்லம்பள்ளி பகுதிகளில் உள்ள மளிகை கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பதாக மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் பானுசுஜாதாவுக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க அவர் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து உணவு பாதுகாப்பு அலுவலர் கந்தசாமி மற்றும் அதியமான்கோட்டை போலீசார் நல்லம்பள்ளி மற்றும் அங்கனாம்புதூர் ஆகிய பகுதிகளில் உள்ள மளிகை கடைகளில் சோதனை செய்தனர். அப்போது 2 மளிகை கடைகளில் குட்கா பதுக்கி விற்றது தெரிய வந்தது. இதையடுத்து அதிகாரிகள் 2 கடைகளில் இருந்து 3 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர். மேலும் 2 கடை உரிமையாளர்களுக்கும் தலா ரூ.5 ஆயிரம் வீதம் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர். தொடர்ந்து 2 மளிகை கடைகளை பூட்டி சீல் வைத்தனர்.