சித்தர் முத்துவடுகநாதர் கோவிலில் குருபூஜை 20 ஆயிரம் பேருக்கு அன்னதானம்

சித்தர் முத்துவடுகநாதர் கோவிலில் குருபூஜை நடந்தது. இதில் 20 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Update: 2023-08-10 19:15 GMT

சிங்கம்புணரி

சித்தர் முத்துவடுகநாதர் கோவிலில் குருபூஜை நடந்தது. இதில் 20 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

குருபூஜை விழா

சிங்கம்புணரி வேங்கைபட்டி சாலையில் சித்தர் முத்துவடுகநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 1833-ஆம் ஆண்டு ஆடி மாதம் 28-ந்தேதி ரோகிணி நட்சத்திரத்தில் சித்தர் முத்துவடுகநாதர் பத்மாசனத்தில் அமர்ந்தபடி ஜீவசமாதியானார். இதை தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் குருபூஜை விழா நடைபெற்று வருகிறது.

இந்த ஆண்டு 191-வது குருபூஜை விழா சித்தர் முத்துவடுகநாதர் சுவாமிகளின் பூஜகர் அம்மையப்ப தேசிகரின் வாரிசுதாரர்கள் நடத்தினர். 191-வது குருபூஜை விழாவை முன்னிட்டு சித்தருக்கு காலை 9 மணி அளவில் 21 வகையான வாசனை திரவியங்கள் மற்றும் பால், பழம், பன்னீர், புஷ்ப உள்ளிட்ட பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் சித்தர் அருள்பாலித்தார்.

அன்னதானம்

இதை தொடர்ந்து கோவில் முன்பு உள்ள மண்டபத்தில் மலை போல் குவித்து வைக்கப்பட்ட அன்னத்திற்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சிங்கம்புணரி பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள், இளைஞர்கள் மற்றும் அரளிப்பட்டி பகுதியில் உள்ள மகாராஜா பாலிடெக்னிக் கல்லூரியை சேர்ந்த சுமார் 70-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒன்றிணைந்து இதில் சுமார் 20 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

விழாவிற்கான ஏற்பாடுகளை சித்தர் முத்துவடுக நாதர் சுவாமிகளின் பூஜகர் அம்மையப்ப தேசிகர் வாரிசுதாரர்கள் தியாகராஜன், அன்பழகன், செந்தில்குமார் மற்றும் கோவில் பூஜகர்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்