ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா
ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா
குருபகவான் மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு பிரவேசம் செய்கிறார். இதை முன்னிட்டு ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோவிலில் நாளை (சனிக்கிழமை) குருப்பெயர்ச்சி விழா நடைபெறுகிறது.
குருப்பெயர்ச்சி விழா
நீடாமங்கலம் அருகே ஆலங்குடி கிராமம் உள்ளது. இங்கு ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோவில் உள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க இக்கோவிலில் வருடம் தோறும் குருபகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடையும் நாளில் குருப்பெயர்ச்சிவிழா அதிவிமரிசையாக நடைபெற்று வருகிறது. இவ்வாண்டும் குருபகவான் மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு நாளை(சனிக்கிழமை) பெயர்ச்சி அடைகிறார். அன்றைய தினம் இக்கோவிலில் குருப்பெயர்ச்சி விழா அதிவிமரிசையாக நடைபெற உள்ளது.
லட்சார்ச்சனை விழா
விழாவையொட்டி குருபகவானுக்கு முதல் கட்ட லட்சார்ச்சனை விழா நேற்றுடன் முடிவடைந்தது. இதையொட்டி கோவிலில் அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. உற்சவர் தட்சிணாமூர்த்தி சன்னதியில் லட்சார்ச்சனை விழா நடைபெற்றது. இதில் மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், கும்பம் ஆகிய ராசிக்காரர்கள் பரிகாரம் செய்து கொண்டனர். வருகிற 27-ந்தேதி முதல் அடுத்தமாதம் (மே) 1-ந்தேதி வரை 2-ம் கட்ட லட்சார்ச்சனையும் நடைபெறுகிறது.
எனவே பக்தர்கள் அர்ச்சனை பரிகார பூஜைகளில் நேரிடையாகவும், அஞ்சல் மூலமாகவும், இணையதளம் மூலமாகவும் தங்களது பெயர், ராசி, கோத்திரம் ஆகியவற்றுடன் பதிவு செய்து பங்கேற்கலாம்.
ஏற்பாடுகள்
விழா ஏற்பாடுகளை நாகப்பட்டினம் அறநிலைய துறை இணை ஆணையர் ராமு உத்தரவின் பேரில் அறநிலைய உதவி ஆணையர்-கோவில் செயல்அலுவலர் மணவழகன், கோவில் கண்காணிப்பாளர் அரவிந்தன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.