சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு குரு பூஜை
சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு குரு பூஜை நடந்தது.;
திருவெறும்பூர்:
துவாக்குடியை அடுத்த திருநெடுங்களநாதர் கோவிலில் 63 நாயன்மார்களில் ஒருவரான சுந்தரமூர்த்தி சுவாமிக்கு குருபூஜை விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதையொட்டி கோவிலின் உட்பிரகாரத்தில் உள்ள சுந்தரமூர்த்தி, திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், மாணிக்கவாசகர், சேக்கிழார் ஆகியோருக்கு 16 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, மூல மந்திர ஜபம், ருத்ர பாராயணம் செய்து, மகாதீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து உற்சவ மூர்த்திக்கு மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு யானை வாகனத்தில் எழுந்தருளி, திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். மேலும் பக்தர்கள் திருவாசகம், தேவாரம் பாடல்களை பாடி சுவாமியை வழிபட்டனர். இந்த சிறப்பு பூஜையை செயல் அலுவலர் வித்யா மற்றும் கோவில் அர்ச்சகர் சோமசுந்தரம் சிவாச்சாரியார், ரமேஷ் சிவாச்சாரியார் ஆகியோர் செய்திருந்தனர்.