துப்பாக்கி சூட்டில் படுகாயம் அடைந்த சின்னத்திரை நடிகர் மதுரைக்கு மாற்றம்
திண்டுக்கல் அருகே சிறுமலையில் நில தகராறில் துப்பாக்கியால் சுடப்பட்ட சின்னத்திரை நடிகர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.;
திண்டுக்கல் அருகே சிறுமலையில் நில தகராறில் துப்பாக்கியால் சுடப்பட்ட சின்னத்திரை நடிகர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
நில தகராறு
திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அருகே உள்ள நெல்லூரை சேர்ந்தவர் கருப்பையா (வயது 50). சின்னத்திரை நடிகர். இவருக்கு சொந்தமான நிலம் திண்டுக்கல் அருகே சிறுமலையில் உள்ளது. இதனால் அவர் அங்கு தங்கியிருந்து விவசாயம் செய்து வந்தார். சிறுமலை அகஸ்தியர்புரத்தை சேர்ந்தவர் ராஜாக்கண்ணு (52). கோவில் பூசாரி. இவர்கள் 2 பேரும் நண்பர்கள்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்தவர் தனபால் (50). விவசாயி. இவர் சிறுமலை அகஸ்தியர்புரத்தில் நிலம் வாங்கி அங்கேயே தங்கி இருந்து விவசாயம் செய்து வந்தார். இந்தநிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனபாலிடம் இருந்து சிறுமலையில் உள்ள 5 ஏக்கர் நிலத்தை கருப்பையா விலைக்கு வாங்கினார். இந்த நிலத்தை அளவீடு செய்தபோது 4½ ஏக்கர் மட்டுமே இருந்தது. இதனால் ½ ஏக்கர் நிலத்திற்கான பணத்தை திருப்பி தருமாறு தனபாலிடம், கருப்பையா கேட்டார். இதுதொடர்பாக 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.
துப்பாக்கி சூடு
இந்தநிலையில் நேற்று முன்தினம் கருப்பையா, தனது நண்பரான ராஜாக்கண்ணுவுடன் சேர்ந்து தனபாலிடம் மீண்டும் பணத்தை கேட்டதாக கூறப்படுகிறது. அப்போது 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த தனபால் தனது வீட்டுக்குள் மறைத்து வைத்திருந்த நாட்டு துப்பாக்கியை எடுத்து வந்து கருப்பையாவை சரமாரியாக சுட்டார். இதை தடுக்க வந்த ராஜாக்கண்ணு மீதும் துப்பாக்கி தோட்டா பாய்ந்தது. இதில் அவரது கை விரலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து கருப்பையா, ராஜாக்கண்ணு ஆகிய 2 பேரும் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் குறித்து திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
மதுரைக்கு மாற்றம்
இதற்கிடையே திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கருப்பையா நேற்று உயிருக்கு ஆபத்தான நிலையில் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் ராஜாக்கண்ணுவுக்கு இடது கையில் பாய்ந்து இருந்த 2 துப்பாக்கி தோட்டா துகள்களை அறுவை சிகிச்சை மூலம் டாக்டர்கள் நேற்று அகற்றினர்.
அதேபோல் துப்பாக்கியால் சுட்ட தனபாலுக்கும் கையில் காயம் ஏற்பட்டது. இதனால் அவரும் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தனபால் சிகிச்சை முடிந்து திரும்பியதும், அவரை கைது செய்து மேல் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.