குஜராத்தில் 2-ம் கட்ட தேர்தல்: 93 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு

குஜராத்தில் 2-ம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது. அங்கு நாளை (திங்கட்கிழமை) வாக்குப்பதிவு நடைபெறுகிறது.;

Update: 2022-12-04 03:55 GMT

ஆமதாபாத்,

குஜராத்தில் 2-ம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது. அங்கு நாளை (திங்கட்கிழமை) வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

182 உறுப்பினர் குஜராத் சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. இதில் முதல் கட்டமாக 89 தொகுதிகளில் கடந்த 1-ந்தேதி வாக்குப்பதிவு நடந்தது. சவுராஷ்டிரா, கட்ச் மற்றும் தெற்கு குஜராத் பிராந்தியங்களில் அடங்கியுள்ள இந்த தொகுதிகளில் 63.31 சதவீத வாக்குகள் பதிவானது. பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது.

இதைத்தொடர்ந்து மீதமுள்ள 93 தொகுதிகளில் நாளை (திங்கட்கிழமை) வாக்குப்பதிவு நடக்கிறது. ஆமதாபாத், வதோதரா, காந்திநகர் பகுதிகளை உள்ளடக்கிய வடக்கு மற்றும் மத்திய குஜராத் பிராந்தியங்களுக்கு உட்பட்ட 14 மாவட்டங்களில் இந்த தொகுதிகள் அடங்கியுள்ளன. இந்த தொகுதிகளில் சுமார் 60 கட்சிகளை சேர்ந்த 833 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களின் அரசியல் எதிர்காலம் நாளை நிர்ணயிக்கப்படுகிறது.

இந்த தொகுதிகளில் கடந்த சில வாரங்களாக அனல் பறக்கும் பிரசாரம் நடந்தது. குறிப்பாக ஆளும் பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி சூறாவளி பிரசாரம் மேற்கொண்டார்.இதில் முக்கியமாக கடந்த 1 மற்றும் 2-ந்தேதிகளில் பிரமாண்ட சாலை பேரணிகள், பிரசார கூட்டங்களை அவர் நடத்தினார். இறுதிக்கட்ட பிரசாரங்களிலும் பங்கேற்று அவர் வாக்குகளை சேகரித்தார். இதைப்போல மத்திய மந்திரிகள், பா.ஜனதா தலைவர்களும் இந்த தொகுதிகளில் பல்வேறு வகையில் பிரசாரங்களை மேற்கொண்டு வாக்காளர்களை கவர்ந்தனர்.

பா.ஜனதாவின் நட்சத்திர பேச்சாளர்கள் நேற்றும் பல பேரணிகளை நடத்தினர். அந்தவகையில் உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி உள்ளிட்டோர் இந்த இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பை மேற்கொண்டனர். இதைப்போல காங்கிரஸ், ஆம் ஆத்மி தலைவர்களும் கடந்த சில வாரங்களாக இந்த தொகுதிகளில் சூறாவளி பிரசாரம் மற்றும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.இவ்வாறு அனல் பறந்த பிரசாரம் நேற்று மாலையுடன் ஓய்வடைந்தது.

இதற்கிடையே இந்த தொகுதிகளில் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளை தேர்தல் கமிஷன் மேற்கொண்டு வருகிறது. மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை வாக்குச்சாவடிகளுக்கு அனுப்புதல் உள்ளிட்ட பணிகள் தீவிரமடைந்து வருகின்றன.பா.ஜனதாவின் முதல்-மந்திரி பூபேந்திர படேல், படேல் இடஒதுக்கீடு போராட்டக்குழு தலைவர் ஹர்திக் படேல் (பா.ஜனதா) உள்ளிட்டோர் நாளைய தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் ஆவர். இந்த தேர்தலை அமைதியாக நடத்தி முடிக்கும் வகையில் மாநிலத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. மாநில போலீசாருடன் இணைந்து துணை ராணுவமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்