பென்னாகரம் அருகே பட்டாசு வெடி விபத்து; குடோன் இடிந்து தரைமட்டம்

பென்னாகரம் அருகே பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடி விபத்தில் கட்டிடம் இடிந்து தரைமட்டமானது.

Update: 2023-10-22 19:45 GMT

பென்னாகரம்

பென்னாகரம் அருகே பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடி விபத்தில் கட்டிடம் இடிந்து தரைமட்டமானது.

பட்டாசு குடோனில் வெடி விபத்து

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பேரூராட்சி கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 50). இவர் எம்.கே. நகரில் பட்டாசு குடோன் வைத்துள்ளார். நேற்று அதிகாலை 5 மணி அளவில் இந்த பட்டாசு குடோனில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதனால் பயங்கர சத்தம் கேட்டது. மேலும் பட்டாசுகள் வெடித்து சிதறியதால் அந்த பகுதியில் கரும்புகை வெளியேறியது.

பட்டாசு குடோனில் ஆட்கள் யாரும் இல்லாத நிலையில் அந்த பகுதியில் உள்ளவர்கள் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே நிலைய அலுவலர் செல்வம் தலைமையில் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.

இந்த விபத்தில் பட்டாசு குடோன் இடிந்து தரைமட்டமானது. அதிகாலை என்பதாலும், ஊருக்கு சற்று ஒதுக்குப்புறமாக பட்டாசு குடோன் இருந்ததாலும் உயிர்ச்சேதமோ, அசம்பாவிதங்களோ ஏற்படவில்லை.

போலீசார் விசாரணை

இந்த வெடி விபத்து குறித்து தகவல் அறிந்ததும் பென்னாகரம் துணை போலீஸ் சூப்பிரண்டு மகாலட்சுமி, போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்தமிழ்செல்வன், மாவட்ட தீயணைப்பு நிலைய அலுவலர் மகாலிங்க மூர்த்தி மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தரைமட்டமான பட்டாசு குடோனை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

சமீப காலமாக இந்த பட்டாசு குடோன் செயல்படாமல் இருந்ததும், இந்த குடோனில் போலீசாரால் கைப்பற்றப்பட்ட வெடிப்பொருட்கள் வைக்கப்பட்டு இருந்ததும் தெரிய வந்தது. மேலும் இந்த வெடி விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பட்டாசு குடோனில் வெடி விபத்து ஏற்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்