கர்நாடகாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் கொய் மலர்கள்

ஐட்ரோஜென்யா ஒரு மலர் ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் இந்த மலர்கள் கோத்தகிரியில் இருந்து கர்நாடகாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.;

Update:2022-08-26 20:20 IST

கோத்தகிரி, 

ஐட்ரோஜென்யா ஒரு மலர் ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் இந்த மலர்கள் கோத்தகிரியில் இருந்து கர்நாடகாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.

கொய்மலர் சாகுபடி

கென்யா, ஆலந்து நாடுகளில் வளரக்கூடிய ஐட்ரோஜென்யா என்ற கொய் மலர்கள், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் சாகுபடி செய்யப்பட்டது. ஒரே செடியில் வெள்ளை, ஊதா, இளஞ்சிவப்பு ஆகிய 3 நிறங்களில் மலர்கள் பூக்கும். இந்த மலர்களுக்கு வெளிநாடுகள், வெளி மாநிலங்களில் அதிக வரவேற்பு உள்ளது. கொரோனா காலத்தில் கொய்மலர் விற்பனை கடும் வீழ்ச்சியடைந்தது.

இதனால் கார்னேசனுக்கு மாற்றாக, கொத்துக் கொத்தாக வளரும் ஐட்ரோஜென்யா மலர்களை புதியதாக சாகுபடி செய்ய தொடங்கினர். இதன் மூலம் கணிசமான லாபம் கிடைத்து வருகிறது. நீலகிரியில் பச்சை தேயிலைக்கு மாற்று பயிராக ஊட்டி, கோத்தகிரி பகுதிகளில் கார்னேசன், ஜர்பரா, லில்லியம் உள்ளிட்ட கொய்மலர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. இதன் கொள்முதல் விலை அடிக்கடி குறைவதால், விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர்.

கொள்முதல் விலை

கோத்தகிரியில் பகுதியில் ஐட்ரோெஜன்யா மலர் சாகுபடி அதிகரித்து வருகிறது. இதுகுறித்து விவசாயி மேகநாதன் கூறியதாவது:- குடில்களில், மண்ணிற்கு பதிலாக, தேங்காய் நார், உரங்கள் அடங்கிய கலவையில் இறக்குமதி செய்யப்பட்ட ஐட்ரோஜென்யா மலர் நாற்றுகளை நடவு செய்து பராமரிக்கப்படுகிறது. ஓராண்டில் மலர்கள் பூக்க தொடங்கும். தொடர்ந்து 20 ஆண்டுகள் வரை பயனளிக்கும். தற்போது ஆடி மாதம் முடிந்து விழாக்கள் மற்றும் சுப நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இதில் மேடை அலங்காரத்தில் மலர்கள் முக்கிய பங்கு வகிக்கிறது.

இதனால் ஐட்ரோஜென்யா ஒரு மலருக்கு ரூ.100 கொள்முதல் விலை கிடைக்கிறது. ஒரே செடியில் 3 நிறங்களில் பூக்களை வளர வைத்து பறிக்க முடியும். வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் இந்த மலர்களின் விலை அதிகமாக உள்ளது. இங்கு சாகுபடி செய்யப்படும் மலர்கள் மிக குறைந்த விலையில் கிடைக்கிறது. இதனால் ஐட்ரோஜென்யா மலர்களுக்கு அதிக தேவை உள்ளது. இந்த வகை மலர்களை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இந்த மலர்களை அறுவடை செய்து கர்நாடகா மாநிலம் பெங்களூருவுக்கு விற்பனைக்காக அனுப்பி வருகிறோம். சீசன் காரணமாக கொய் மலர்களின் தேவை சந்தையில் மேலும் அதிகரிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்