கொய்யா சாகுபடி; விளைச்சல் இருந்தும் விலை இல்லை

த்திராயிருப்பு பகுதிகளில் கொய்யாபழம் விளைச்சல் இருந்தும் விலை இல்லாததால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.

Update: 2022-09-05 19:37 GMT

வத்திராயிருப்பு, 

வத்திராயிருப்பு பகுதிகளில் கொய்யாபழம் விளைச்சல் இருந்தும் விலை இல்லாததால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.

சுவை மிக்க கொய்யா

மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியில் வத்திராயிருப்பு அமைந்துள்ளது. இதனால் வத்திராயிருப்பு, எஸ்.ராமச்சந்திராபுரம், வ.மீனாட்சிபுரம், கான்சாபுரம், அத்தி கோவில், நெடுங்குளம், தாணிப்பாறை, பிளவக்கல், கோட்டையூர், இலந்தைகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விளையக்கூடிய கொய்யாவானது இயற்கையானதாகவும் மிகவும் சுவையானதாகவும் உள்ளது.

ஆதலால் வியாபாரிகள் நேரடியாக தோப்பிற்கு சென்று பழங்களை வாங்கி வெளிமாவட்டங்கள் மற்றும் வத்திராயிருப்பு பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வருகின்றனர்.

அதிக விளைச்சல்

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

வத்திராயிருப்பு பகுதிகளில் விளையக்கூடிய கொய்யாைவ இந்த பகுதியில் உள்ள மக்கள் மட்டுமின்றி மற்ற மாவட்டங்களில் உள்ளவர்களும் விரும்பி வாங்கி செல்கின்றனர். இப்பகுதியில் விளையக்கூடிய கொய்யா தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களுக்கும் ஏற்றுமதி ஆகிறது. ஆனால் இந்த ஆண்டு எதிர்பார்த்ததை விட அதிக விளைச்சல் இருந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

அதே நேரத்தில் உரிய விலை இல்லாததால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர். வெளியூர் வியாபாரிகள் ஒரு கிலோ கொய்யா பழத்தை ரூ.10-க்கு வாங்குகின்றனர். பின்னர் அவற்றை ரூ.40 முதல் ரூ.50 வரை விற்பனை செய்கின்றனர்.

விலை இல்லை

அதேபோல வெளி மாநிலங்களுக்கு விற்பனைக்கு செல்லும் கொய்யா ரூ.100 வரை விற்பனை செய்யப்படுகிறது. குளிர்பானங்கள் தயாரிப்பதற்காக குளிர்பான தயாரிக்கும் ஆலைகளில் இருந்து நேரடியாக வந்து விவசாயிகளிடம் வாங்கி செல்கின்றனர்.

விளைச்சல் இருந்தும் விலை இல்லாததால் நாங்கள் பெரும் நஷ்டத்திற்கு ஆளாகி வருகிறோம். வேலை ஆட்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத சூழ்நிலையும் உருவாகி உள்ளது. இதனால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர். கொய்யா விலை வீழ்ச்சியினை கட்டுப்படுத்த தமிழக அரசு மாவட்டத்தில் கொய்யா கூழ் தயாரிக்கும் ஆலையினை நிறுவ வேண்டும். அத்துடன் விவசாயிகளிடம் இருந்து கொய்யாவை நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்