உணவு பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. வரி விதிப்பை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்

உணவு பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. வரி விதிப்பை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்று தேன்கனிக்கோட்டையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்தார்.

Update: 2022-07-26 18:22 GMT

பொதுக்கூட்டம்

தேன்கனிக்கோட்டையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி 24-வது மாவட்ட மாநாடு மற்றும் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாநில செயலாளர் முத்தரசன் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் மாநில குழு உறுப்பினர்கள் லகுமையா, பூதட்டியப்பா, மாவட்ட துணை செயலாளர் சின்னசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் முத்தரசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

வனப்பகுதியில் வாழக்கூடிய பல ஆயிரம் மக்கள் விவசாயம் செய்து வரும் நிலங்களுக்கு பட்டா வழங்க வேண்டும். ஆடு, மாடுகள் வனப்பகுதியில் மேய விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும். மத்திய அரசு அரிசி, கோதுமை மாவு, பால், பருப்பு போன்ற பல உணவு பொருட்களுக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி. வரி விதித்துள்ளது. ஏற்கனவே கடுமையான விலைவாசி உயர்வு காரணமாக மக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். உணவு பொருட்கள் மீது வரியை உயர்த்தி இருப்பது ஏற்கக்கூடியதல்ல. இது கண்டனத்துக்குரியது. வரி விதிப்பை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்.

பணியக்கூடாது

மாநில அரசு கட்டாயம் மின்கட்டணத்தை உயர்த்த வேண்டும் என ஏராளமான கடிதங்களை மத்திய அரசு அனுப்பி நிர்பந்தப்படுத்துகிறது. மத்திய அரசின் நிர்பந்தத்திற்கு பணியக்கூடாது என தெரிவித்துள்ளோம். நீட் தேர்வில் பெண்களை காதில் தோடு அணியக்கூடாது. மூக்குத்தி அணிய கூடாது. வளையல் அணியக்கூடாது என நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.

இப்போது, அக்னிபத் திட்டத்திற்கு ராணுவத்திற்கு ஆள் எடுக்கும் போது முழு கை சட்டை, பை வைத்த சட்டை போட்டு வரக்கூடாது. பனியனுடன் வர வேண்டும் என கூறுவது எதற்கு என புரியவில்லை. ராணுவத்திற்கு ஆள் எடுக்கும் போது என்ன சாதி என கேட்கப்படுகிறது. இது நாட்டிற்கும் ஜனநாயகத்திற்கும் நல்லதல்ல.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்