ஜி.எஸ்.டி. சாலையில் மணல் பரவி கிடப்பதால் வாகன ஓட்டிகள் அவதிநடவடிக்கை எடுக்க கோரிக்கை

கிளாம்பாக்கம் புறநகர் பஸ் நிலையம் எதிரே ஜி.எஸ்.டி. சாலையில் மணல் பரவி கிடப்பதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர். இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-08-19 08:11 GMT

வண்டலூர்,

செங்கல்பட்டு மாவட்டத்தில் புதியதாக கட்டப்பட்டுள்ள கிளாம்பாக்கம் புறநகர் பஸ் நிலையம் எதிரே உள்ள ஜி.எஸ்.டி. சாலையில் கடந்த 2 நாட்களாக இரவு நேரத்தில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணமாக தற்போது கிளாம்பாக்கம் புறநகர் பஸ் நிலையம் எதிரே உள்ள ஜி.எஸ்.டி. சாலை முழுவதும் மணல் சிதறி பரவி கிடக்கிறது.

இதனால் இந்த சாலை வழியாக மோட்டார் சைக்கிளில் செல்லும் வாகன ஓட்டிகள் திடீரென பிரேக் பிடிக்கும்போது மணல் பரப்பில் டயர் வழுக்கி சாலையில் விழுந்து படுகாயம் அடைகின்றனர்.

இது குறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:-

சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வண்டலூர் கிளாம்பாக்கம், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, பொத்தேரி உள்பட பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மணல் பரவி கிடக்கிறது. இதனால் அடிக்கடி சாலை விபத்துக்கள் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட ஜி.எஸ்.டி. சாலையை பராமரிக்கும் தேசிய நெடுஞ்சாலை துறையை சேர்ந்த அதிகாரிகள் சாலையில் பரவி கிடக்கும் மணல் குவியலை அகற்ற வேண்டும் மேலும் கிளாம்பாக்கம் புறநகர் பஸ் நிலையம் எதிரே மழை பெய்யும் போதெல்லாம் அதிக அளவில் சாலைகளில் மணல் குவியல் பரவி கிடக்கிறது.

எனவே அந்த பகுதியில் தினந்தோறும் சாலையில் பரவி கிடக்கும் மணலை அகற்றி சுத்தம் செய்வதற்கு நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்