பட்டாசுக்கான ஜி.எஸ்.டி. வரியை 12 சதவீதமாக குறைக்க வேண்டும்; வணிகர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தல்

பட்டாசுக்கான ஜி.எஸ்.டி. வரியை 12 சதவீதமாக குறைக்க வேண்டும் என்று தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பின் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.

Update: 2023-03-12 20:30 GMT

தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பின் மாநில செயற்குழு கூட்டம், கொடைக்கானலில் நடந்தது. இதற்கு கூட்டமைப்பின் தலைவர் ராஜா சந்திரசேகரன் தலைமை தாங்கினார். செயலாளர் இளங்கோவன், பொருளாளர் பாண்டியராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தமிழகம் முழுவதும் இருந்து 120-க்கும் மேற்பட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். பின்னர் ராஜா சந்திரசேகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பட்டாசு கடையில் பாதுகாப்பாக வியாபாரம் செய்வது குறித்து இந்த கூட்டத்தில் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த மாதம் பட்டாசு விற்பனை உரிமை புதுப்பிக்க கூடிய காலமாகும். தமிழகத்தில் வெவ்வேறு கால அளவு கொண்ட புதுப்பித்தல் முறை உள்ளது. ஒரு சில மாவட்டங்களில் 2 ஆண்டுகள் பட்டாசு விற்பனை செய்ய தமிழக அரசு உரிமம் அளித்துள்ளது. ஒரு சில இடங்களில் 3 ஆண்டுகள் விற்பனை செய்ய உரிமம் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியாக 5 ஆண்டுகள் விற்பனை உரிமம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல பட்டாசு விற்பனையாளர்கள் உரிமம் கோரி விண்ணப்பித்த உடன் காலம் தாழ்த்தாமல் 2 மாதத்திற்குள் உரிமம் வழங்க வேண்டும், பட்டாசுகளுக்கு மத்திய அரசு 18 சதவீத ஜி.எஸ்.டி. வரி விதித்து உள்ளது. இந்த வரியை 12 சதவீதமாக குறைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். இதையடுத்து பாதுகாப்பாக பட்டாசு விற்பனை செய்வது குறித்து உறுதிமொழி எடுக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்