குரூப்-4 தேர்வு மையத்துக்குள் அனுமதி மறுப்பு

திருவாரூரில் தாமதமாக வந்ததாக கூறி குரூப்-4 தேர்வு மையத்துக்குள் அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து தேர்வர்கள் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-07-24 17:06 GMT

திருவாரூரில் தாமதமாக வந்ததாக கூறி குரூப்-4 தேர்வு மையத்துக்குள் அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து தேர்வர்கள் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குரூப்-4 தேர்வு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) மூலம் குருப்-4 தேர்வு நேற்று நடந்தது. இதையொட்டி திருவாரூர், கூத்தாநல்லூர், குடவாசல், மன்னார்குடி, நன்னிலம், நீடாமங்கலம், திருத்துறைப்பூண்டி, வலங்கைமான் ஆகிய வட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் 93 தேர்வு மையங்களில் 122 தேர்வறைகள் அமைக்கப்பட்டு இருந்தன.

இன்று காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை தேர்வு நடந்தது. திருவாரூர் மாவட்டத்தில் குரூப்-4 தேர்வு எழுத 35 ஆயிரத்து 646 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.

சாலையில் அமர்ந்து தர்ணா

திருவாரூரில் உள்ள அரசு உதவி பெறும் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் குரூப்-4 தேர்வு எழுத இன்று ஏராளமானோர் வந்தனர். காலை 9 மணிக்குள் தேர்வு எழுதும் அறைக்குள் சென்று விட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு இருந்த நிலையில் இந்த தேர்வு மையத்துக்கு 9.05 மணிக்கு வந்தவர்களை தேர்வு எழுத அலுவலர்கள், போலீசார் அனுமதிக்கவில்லை. இதனால் தேர்வர்கள் அங்கு சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தேர்வு விதிகளின்படி உங்களை அனுமதிப்பதற்கு எங்களுக்கு அதிகாரம் இல்லை ஆகையால் போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்ல வேண்டும் என போலீசார் அறிவுறுத்தினர். இதையடுத்து தேர்வு எழுத வந்தவர்கள் அங்கிருந்து கண்ணீருடன் புறப்பட்டு சென்றனர். தேர்வு மையத்துக்குள் அனுமதிக்காததை கண்டித்து தேர்வர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்