குரூப்-4 தேர்வு தொடக்கம் - 7,301 காலி பணியிடங்களுக்கு 22 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர்
தமிழகம் முழுவதும் 316 தாலுகா மையங்களில் உள்ள 7 ஆயிரத்து 689 தேர்வு மையங்களில் நடக்கிறது.
குரூப்-4 பதவிகளில் வரும் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் உள்பட 7 ஆயிரத்து 301 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) வெளியிட்டது. இந்த தேர்வுக்கு தமிழகம் முழுவதிலும் இருந்து 9 லட்சத்து 35 ஆயிரத்து 354 ஆண்கள், 12 லட்சத்து 67 ஆயிரத்து 457 பெண்கள், 131 திருநங்கைகள் என மொத்தம் 22 லட்சத்து 2 ஆயிரத்து 942 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.
தமிழகம் முழுவதும் 316 தாலுகா மையங்களில் உள்ள 7 ஆயிரத்து 689 தேர்வு மையங்களில் இந்த தேர்வு இன்று நடக்கிறது.
தேர்வர்கள் காலை 8.30 மணிக்குள் தேர்வு மையத்துக்குள் வர அறிவுறுத்தப்பட்டு இருக்கின்றனர். 9 மணிக்கு ஓ.எம்.ஆர். விடைத்தாள்கள் தேர்வர்களுக்கு வழங்கப்பட இருப்பதாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. 9 மணிக்கு மேல் வரும் தேர்வர்கள் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும் டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்றை கருத்தில் கொண்டு தேர்வர்கள், தேர்வு மைய வளாகத்தில் முககவசம் அணிந்திருக்க வேண்டும். முககவசம் அணிந்து வந்தால் மட்டுமே தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று உத்தரவிடப்பட்டு இருக்கிறது.
தேர்வு மையத்துக்கு தேர்வர்கள் எளிதாக வந்து செல்வதற்கு ஏதுவாக போக்குவரத்து கழகம் சார்பில் தமிழகம் முழுவதும் சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அதன்படி, தமிழகம் முழுவதும் சாதாரணமாக இயக்கப்படும் பஸ்கள், சிறப்பு பஸ்கள் என மொத்தம் 11 ஆயிரத்து 670 பஸ்கள் இதற்காக ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.
அதன்படி தேர்வர்கள் காலை 9 மணிக்குள் தேர்வு மையத்துக்குள் வந்தனர். தேர்வர்கள் அனைவருக்கும் காலை 9 மணிக்கு ஓ.எம்.ஆர். விடைத்தாள்கள் வழங்கப்பட்டது. இந்நிலையில் 7 ஆயிரத்து 301 காலி பணியிடங்களுக்கான குரூப்-4 தேர்வு 9.30 மணிக்கு அனைத்து தேர்வு மையங்களிலும் தொடங்கியது.