சிவகங்கை மாவட்டத்தில்குரூப்-1 தேர்வு
சிவகங்கை மாவட்டத்தில் 2,562 பேர் குரூப்-1 தேர்வு எழுதினர்;
காரைக்குடி,
தமிழகத்தில் காலியாக உள்ள துணை கலெக்டர், வணிக வரி உதவி கமிஷனர், மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி, ஊரக மேம்பாட்டுத்துறை உதவி இயக்குனர் ஆகிய குரூப்-1 பதவிகளில் உள்ள 92 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்து நேற்று தேர்வு நடைபெற்றது. இந்த பதவிகளுக்கு தமிழகம் முழுவதும் இருந்து 3.50 லட்சம் பேர் விண்ணப்பித்து இருந்தனர்.
சிவகங்கை மாவட்டத்தில் இந்த தேர்வு காரைக்குடியில் உள்ள கோவிலூர் நாச்சியப்பா சுவாமிகள் பாலிடெக்னிக் கல்லூரி, அமராவதிபுதூர் சாரதா நிகேதன் மகளிர் கல்லூரி, ராஜராஜன் பொறியியல் கல்லூரி, காரைக்குடி அழகப்பா அரசு பொறியியல் கல்லூரி, அழகப்பா அரசு கலைக்கல்லூரி, வித்யாகிரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, எஸ்.எம்.எஸ்.வி. ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்பட 14 இடங்களில் நடைபெற்றது.
இந்த தேர்வினை எழுத மாவட்டம் முழுவதும் இருந்து மொத்தம் 4,317 பேர் விண்ணப்பத்திருந்தனர். அவர்களில் 2,562 பேர் தேர்வு எழுதினர். 1,755 பேர் தேர்வு எழுத வரவில்லை. காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை இத்தேர்வு நடைபெற்றது.
இதையொட்டி தேர்வு மையங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மேலும் பறக்கும்படை அதிகாரிகள் தேர்வு மையங்களுக்கு சென்று பார்வையிட்டு சோதனை நடத்தினர். மேலும் தேர்வு எழுத வந்தவர்களின் வசதிகளுக்கு ஏற்ப குடிநீர், பஸ் போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தது.