கிணற்றுக்குள் தவறி விழுந்து புதுமாப்பிள்ளை சாவு
அந்தியூர் அருகே கிணற்றுக்குள் தவறி விழுந்து புதுமாப்பிள்ளை பரிதாபமாக இறந்தார்.;
அந்தியூர்
அந்தியூர் அருகே கிணற்றுக்குள் தவறி விழுந்து புதுமாப்பிள்ளை பரிதாபமாக இறந்தார்.
புதுமாப்பிள்ளை
அந்தியூர் அருகே உள்ள பள்ளிபாளையம் பகுதியை சேர்ந்தவர் சம்பத்குமார் (வயது 26). விவசாயி. இவருக்கும், கவுந்தப்பாடி அருகே உள்ள செந்தாம்பாளையத்தை சேர்ந்த சரண்யா (22) என்ற பெண்ணுக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடைபெற்றது.
இந்த நிலையில் சம்பத்குமார் நேற்று தனது தோட்டத்தில் ஓடிக்கொண்டிருந்த மின் மோட்டாரை நிறுத்த சென்றார்.
கிணற்றுக்குள் தவறி விழுந்தார்
மோட்டாைர நிறுத்திவிட்டு கிணற்றில் தண்ணீர் எந்த உயரத்துக்கு உள்ளது என எட்டிப்பார்த்து உள்ளார். அப்போது அவர் எதிர்பாராதவிதமாக கிணற்றுக்குள் தவறி விழுந்தார். இதில் தண்ணீரில் தத்தளித்த அவர் தன்னை காப்பாற்றும் படி அபயக்குரல் எழுப்பினார்.
அவருடைய சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிச்சென்று அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் முடியவில்லை. மேலும் இதுகுறித்து அந்தியூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சாவு
இதற்கிைடயே அவர் தண்ணீரில் மூழ்கி இறந்துவிட்டார். இதுபற்றிய தகவல் கிடைத்தும் அந்தியூர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சம்பத்குமாரின் உடலை மீட்டனர். மேலும் அந்தியூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சம்பத்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருமணமான 3 மாதத்தில் கிணற்றுக்குள் புதுமாப்பிள்ளை தவறி விழுந்து இறந்த சம்பவம் அந்த பகுதியில் உள்ளவர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.