மோட்டார் சைக்கிள் விபத்தில் புதுமாப்பிள்ளை சாவு

ஆரல்வாய்மொழி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் புதுமாப்பிள்ளை பரிதாபமாக இறந்தார்.

Update: 2022-12-08 18:45 GMT

ஆரல்வாய்மொழி,

ஆரல்வாய்மொழி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் புதுமாப்பிள்ளை பரிதாபமாக இறந்தார்.

புதுமாப்பிள்ளை

பரபற்று அருகே உள்ள எள்ளுவிளையை சேர்ந்தவர் செல்வன் (வயது36) கொத்தனார். இவருக்கும் மரிய ரேகா என்பவருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. மரியரேகாவின் சொந்த ஊர் நெல்லை மாவட்டம் பணகுடி ஆகும். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பணகுடியில் உள்ள தாய் வீட்டுக்கு சென்றிருந்தார்.

இதையடுத்து சம்பவத்தன்று செல்வன் மனைவியை அழைத்து வருவதற்காக மோட்டார் சைக்கிளில் பணகுடிக்கு புறப்பட்டார். அவர் நாகர்கோவில்- காவல்கிணறு 4 வழிசாலையில் சென்று கொண்டிருந்தார். இந்தநிலையில் முப்பந்தல் பகுதியில் விபத்தில் சிக்கி படுகாயமடைந்து சாலையில் கிடந்தார்.

பரிதாப சாவு

அந்த வழியாக சென்றவர்கள் செல்வனை மீட்டு ஆசாரிபள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று செல்வன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து செல்வன் மோட்டார் சைக்கிளில் இருந்து தானாக விழுந்தாரா? அல்லது ஏதாவது வாகனம் மோதி விபத்து நடந்ததா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருமணமாகி மூன்றே மாதத்தில் விபத்தில் சிக்கி புதுமாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்