மூட்டைகளை எடைபோடும் கொக்கியில் தூக்குப்போட்டு உரக்கடை உரிமையாளர் தற்கொலை
கள்ளக்காதலனுடன் குடும்பம் நடத்திய மகள் சொத்து, பணம் கேட்டு தொந்தரவு செய்ததால் மனமுடைந்த தந்தை உரக்கடைக்குள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருப்பத்தூர்
கள்ளக்காதலனுடன் குடும்பம் நடத்திய மகள் சொத்து, பணம் கேட்டு தொந்தரவு செய்ததால் மனமுடைந்த தந்தை உரக்கடைக்குள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
உரக்கடை வியாபாரி
திருப்பத்தூர் தாலுகா வெப்பாலம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 65), அதே பகுதியில் உரக் கடை வைத்து வியாபாரம் நடத்தி வந்தார். இவரது மகள் முகிலரசிக்கு (32) திருமணமாகி குழந்தைகள் உள்ளன. கருத்து வேறுபாடு காரணமாக முகிலரசி கணவரை பிரிந்து விஷமங்கலம் பகுதியில் தனியாக வசித்து வந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த கவியரசு என்பவருடன் தொடர்பு ஏற்பட்டு தற்போது குடும்பம் நடத்தி வருகிறார்கள்.
கவியரசு மற்றும் முகிலரசி இருவரும் சேர்ந்து ராதாகிருஷ்ணனிடம் தனக்கு சொத்து மற்றும் பணம், நகை வேண்டும் என்று அடிக்கடி தொந்தரவு செய்துள்ளனர். போனிலும் கேட்டு மிரட்டி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ராதாகிருஷ்ணன் மனமுடைந்து நேற்று காலை தனது உர கடைக்கு சென்று கதவை உள்புறமாக மூடிக்கொண்டு உர மூட்டைகளை எடைபோடும் கொக்கியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
வழக்குப்பதிவு
அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் கடையை திறந்து பார்த்த போது ராதாகிருஷ்ணன் தூக்குப்போட்டு இறந்து கிடந்தது தெரியவந்தது.
இதுகுறித்து ராதாகிருஷ்ணன் மனைவி அல்லிராணி கொடுத்த புகாரின் பேரில் திருப்பத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சொத்து, பணம் கேட்டு மகள் தொந்தரவு செய்ததால் தந்தை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.