திண்டுக்கல்லில் ஆசிரியை வீட்டில் கிரைண்டர் தீப்பிடித்து எரிந்தது

திண்டுக்கல்லில் ஆசிரியை வீட்டில் கிரைண்டர் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Update: 2022-12-19 17:13 GMT

திண்டுக்கல் ஜி.டி.என். சாலையில் உள்ள திருநகரை சேர்ந்தவர் ஜோஸ்பின் (வயது 50). இவர், பாடியூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இன்று காலை இவர், பள்ளிக்கு செல்வதற்கு முன்பு வீட்டில் கிரைண்டரில் மாவு அரைத்து கொண்டிருந்தார். அப்போது மின்சாரம் நிறுத்தப்பட்டதால், கிரைண்டர் சுவிட்சை அணைப்பதற்கு மறந்து, வீட்டை பூட்டிவிட்டு பள்ளிக்கு சென்றுவிட்டார்.

இந்தநிலையில் மீண்டும் மின்சாரம் வந்ததால், கிரைண்டர் தானாக இயங்கி உள்ளது. நீண்டநேரம் இயங்கியதால், கிரைண்டர் சூடாகி தீப்பற்றி எரிய தொடங்கியது. தீ வேகமாக பரவியதால், சமையல் அறையில் இருந்த பொருட்களும் எரிந்தன. வீட்டில் இருந்து கரும்புகை வெளியேறியதை கண்டு அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் ஆசிரியை ஜோஸ்பினுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டதால், அவரும் வீட்டிற்கு வந்துவிட்டார்.

இதைத்தொடர்ந்து விரைந்து வந்த தீயணைப்பு படைவீரர்கள் வீட்டில் எரிந்த தீயை அணைத்தனர். மேலும் கியாஸ் சிலிண்டர் அணைத்து வைக்கப்பட்டிருந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்