நெல்லை மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம்
நெல்லை மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் கலெக்டர் விஷ்ணு தலைமையில் நடந்தது.
நெல்லை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கலெக்டர் விஷ்ணு தலைமை தாங்கினார். சேரன்மாதேவி உதவி கலெக்டர் முகமது சபீர் ஆலம், பயிற்சி உதவி கலெக்டர் கோகுல், களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குனர்கள் செண்பக பிரியா, ராமேஸ்வரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) அசோக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் விவசாயிகள் காரசாரமாக விவாதம் செய்தனர். கல்லிடைக்குறிச்சியை சேர்ந்த ராஜ் பேசுகையில், ''பொட்டல் கிராமத்தில் அனுமதியின்றி 26 அடி ஆழத்துக்கு மணல் அள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் எலுமிச்சையாறு அணைக்கட்டு வண்டல் ஓடையில் வெள்ளம் வந்தால் உலுப்படிப்பாறை என்ற ஊர் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அந்த பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் கீழே இறங்கி விடும். அதிகாரிகள் மணல் கொள்ளைக்கு துணை போகின்றனர். இதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
இதற்கு கலெக்டர் விஷ்ணு பதில் அளிக்கையில், "இதுதொடர்பாக சேரன்மாதேவி உதவி கலெக்டர் மூலம் ஆய்வு செய்து ஒரு வாரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.
விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் பெரும்படையார்:- நீர்ப்பாசன சங்க தேர்தல் 10 ஆண்டுகளுக்கு மேலாக நடத்தப்படவில்லை. இந்த ஆண்டு தேர்தல் நடந்தால் கால்வாய்கள், மடைகள் சீரமைப்பு போன்ற பணிகளை மேற்கொள்ள முடியும். சிறிய அளவிலான பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும். எனவே நீர்ப்பாசன சங்க தேர்தலை நடத்த அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும். களக்காடு பகுதியில் விவசாயிகள் மீது வனத்துறை பொய் வழக்கு போடுவதை கண்டித்து அளித்த மனுவுக்கு இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. எந்த விசாரணையும் நடத்தவில்லை. தற்போது வனத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் அளவுக்கு வந்து விட்டதால், உரிய விசாரணை நடத்த வேண்டும்.
கங்கைகொண்டான் ராஜபதியை சேர்ந்த விவசாயிகள் பேசுகையில், "கங்கைகொண்டான் பகுதியில் சூரிய சக்தி மின் திட்டத்துக்காக ராஜபதியில் 130 ஏக்கர் விளை நிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதி கையகப்படுத்தப்படுகிறது. இதில் குடியிருப்பு மற்றும் விளைநிலத்தை விடுவிக்க வேண்டும் என்று வரைபடத்தை காட்டி கலெக்டரிடம் முறையிட்டனர்.
கூட்டத்தில் கலெக்டர் விஷ்ணு விவசாயிகளின் கேள்விகளுக்கு பதில் அளித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
நெல்லை மாவட்டத்தில் வருடாந்திர இயல்பான மழை அளவு 814 மில்லி மீட்டராகும். நடப்பாண்டில் 722 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இது 11.34 சதவீதம் குறைவு ஆகும். இதேபோல் கடந்த ஆண்டு அணைகளில் 93 சதவீதம் நீர் இருப்பு இருந்தது. தற்போது 52 சதவீதம் மட்டுமே தண்ணீர் உள்ளது. நெல்லை மாவட்டத்தில் நடப்பாண்டில் இதுவரை 33,200 எக்டேர் பரப்பளவில் நெல் சாகுபடியும், சிறுதானியங்கள் 661 எக்டேரிலும், பயறு வகை பயிர்கள் 8,253 எக்டேரிலும், பருத்தி 628 எக்டேரிலும், 24 எக்டேரில் கரும்பு பயிரும், 174 எக்டேரில் எண்ணெய் வித்து பயிர்களும் மொத்தம் 43 ஆயிரம் எக்டேர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
உரம் தடையின்றி கிடைக்க 9 பறக்கும் படை அமைக்கப்பட்டு 70 கடைகளில் திடீர் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் 3 கடைகளுக்கு விற்பனை தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் விதை விற்பனை நிலையங்களில் ஆய்வு செய்து 35 விதை விற்பனை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் நெல்லை மண்டல இணை பதிவாளர் அழகிரி, தோட்டக்கலை துறை துணை இயக்குனர் பாலகிருஷ்ணன் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.