கரூரில் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: மாட்டுவண்டியில் மணல் அள்ள அனுமதி கேட்டு கலெக்டரிடம் மனு

கரூரில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாட்டுவண்டியில் மணல் அள்ள அனுமதி கேட்டு கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.

Update: 2023-02-06 18:34 GMT

குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து ஓய்வூதியம், வங்கிகடன், இலவச வீட்டுமனைப்பட்டா, வேலைவாய்ப்பு, உதவி உபகரணங்கள், குடும்ப அட்டை கோருதல் என மொத்தம் 501 மனுக்களை பெற்றார்.

இதில் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து 72 மனுக்கள் பெறப்பட்டன. பின்னர் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பின்னர் 32 பயனாளிகளுக்கு ரூ.56 லட்சத்து 20 ஆயிரத்து 915 மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

மிட்டாய் பாக்கெட்டுகளில் ஊசி நூல்...

வெங்கமேடு எஸ்.பி.காலனி பகுதியை சேர்ந்த 7-ம் வகுப்பு மாணவர் விஸ்வக் நித்தின் என்பவர் கோரிக்கை மனு ஒன்று கொடுத்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- நான் கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளியில் இருந்து வீடு திரும்பும்போது, வழியில் ஒரு பெட்டிக்கடையில் ரூ.5-க்கு கடலை மிட்டாய் பாக்கெட் வாங்கி சாப்பிட்டேன். சாப்பிடும்போது தொண்டையில் வலி ஏற்பட்டு விட்டது. இதனால் எச்சில் கூட முழுங்க முடியாத நிலை ஏற்பட்டது. இதுகுறித்து எனது பெற்றோரிடம் கூறினேன்..

அவர்கள் என்னை ேகாவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சென்று, தொண்டையை பரிசோதித்து பார்த்தபோது, தொண்டையில் ஸ்டேப்ளர் பின் இருந்தது. இதையடுத்து அறுவை சிகிச்சை மூலம் அதனை அகற்றி விட்டோம். அப்போது தான் எனக்கு தெரிந்தது அந்த ஸ்டேப்ளர் பின் கடலை மிட்டாய் பாக்கெட்டில் இருந்த பின் என்று. எனவே இது போன்ற பாக்கெட்களில் விற்கும் உணவுப் பொருட்களில் ஸ்டேபிளர் பின்னை பயன்படுத்தாது ஊசி நூல் கொண்டு தைத்து கடைகளில் விற்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறியிருந்தார்

மின்விளக்கு வசதி வேண்டும்

கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள வீரியம்பாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- நேரு யுவகேந்திராவுடன் இணைந்து சமுதாயத்தில் பல சேவைகள் செய்து வருகிறோம். இதனால் வீரியம்பாளையம் ஊராட்சி கண்ண முத்தம்பட்டியில் நூலகம் ஒன்று அமைக்கப்பட்டு அதனை பள்ளி மாணவ, மாணவிகள் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் மாணவ, மாணவிகள் படிப்பதற்கும், எழுதுவதற்கும் படிப்பதற்கும் போதுமான மின்விளக்குகள் இல்லை. எனவே மின்விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

டாஸ்மாக்கடையை

இடமாற்ற கூடாது

கடவூர் தாலுகா பாப்பையம்பாடி கிராமத்தை சேர்ந்த எல்லையம்மன் கோவில்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

எங்கள் ஊரில் சுமார் 200 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். எங்கள் ஊரின் மிக அருகில் உள்ள லட்சுமணம்பட்டிக்கு டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்யப்படுவதாக தெரிகிறது. பழைய ஜெயங்கொண்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிக்கு எங்கள் ஊர் மற்றும் அருகில் இருக்கும் வீரியம்பாளையம் கிராமத்தில் இருந்தும் சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் லட்சுமணன்பட்டி வழியாக சைக்கிளிலும், நடந்தும் சென்று வருகின்றனர். இந்தநிலையில் லட்சுமணம்பட்டிக்கு டாஸ்மாக் கடையை இடமாற்ற செய்வதற்கு இடத்தை தேர்வு செய்ய தாசில்தார் மற்றும் டாஸ்மாக் மேற்பார்வையாளர் ஆகியோர் பார்வையிட்டு உள்ளதாக தெரிகிறது. ஏற்கனவே இந்த வழித்தடத்தில் திருட்டு உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. டாஸ்மாக் கடையை இங்கு இடமாற்றம் செய்தால் பள்ளி மாணவ, மாணவிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக இருக்கும் எனவே டாஸ்மாக்கடையை இடம் மாற்றம் செய்வதை தடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

கதறி அழுத பெண்

புன்னம் சத்திரம் பகுதியை சேர்ந்த உமாமகேஸ்வரி என்பவர் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தார். அப்போது அவர் திடீரென கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு தரையில் அமர்ந்து கதறி அழுதார். இதைக்கண்ட அங்கிருந்த போலீசார் அவரை சமாதானம் செய்து விசாரித்தனர். விசாரணையில், அவர், எனக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். எனது கணவர் இறந்து விட்டார். தற்போது எனக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் எந்த வேலைக்கும் செல்லவில்லை. இதனால் எனக்கு அரசு வேலை கொடுக்க ஏற்பாடு செய்து, எனது குழந்தைகளின் கல்வி செலவிற்கு கல்வி உதவித்தொகை வழங்க வேண்டும் என்றார், இதையடுத்து போலீசார் அவரை அங்கிருந்து அழைத்து சென்றனர்.

மாட்டுவண்டியில் மணல் அள்ள...

மாயனூர் வட்டார மாட்டுவண்டி தொழிலாளர்கள் கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில், நாங்கள் கடந்த பல ஆண்டுகளாக காவிரி ஆற்றுப்பகுதியில் அரசு அனுமதியோடு மாட்டுவண்டியில் மணல் எடுத்து உள்ளூர் மற்றும் அரசு கட்டுமான பணிகளுக்கும் விற்பனை செய்து பிழைப்பு நடத்தி வருகிறோம். ஆனால் கடந்த சில ஆண்டுங்களாக பிழைப்புக்கு வழியின்றி வாழ்வாதாரம் இல்லாமல் பாதிக்கப்பட்டு வருகிறோம். எனவே காவிரி ஆற்றில் மாட்டு வண்டி மூலம் மணல் எடுக்க அனுமதிக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்