முன்னாள் படைவீரர்களுக்கான குறைகேட்பு கூட்டம்
கடலூரில் முன்னாள் படைவீரர்களுக்கான குறைகேட்பு கூட்டம் கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமையில் நடந்தது.;
கடலூர்:
முன்னாள் படைவீரர்கள், அவர்தம் குடும்பத்தினர் மற்றும் படைப்பிரிவில் பணிபுரியும் வீரர்களின் குடும்பத்தினர்களுக்கான சிறப்பு குறைகேட்பு கூட்டம் கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் முன்னாள் படைவீரர் மற்றும் அவர்களை சார்ந்தோர் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 50 மனுக்களை கலெக்டரிடம் அளித்தனர். அதனை பெற்றுக்கொண்ட கலெக்டர், மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் கள ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார். இதையடுத்து முன்னாள் படைவீரர்களின் குடும்பத்தை சார்ந்தோர்களுக்கு ரூ.95 ஆயிரம் மதிப்பிலான கல்வி உதவித்தொகையை கலெக்டர் வழங்கினார்.
இதில் முன்னாள் படைவீரர் நல அலுவலக உதவி இயக்குனர் லெப்.கர்னல்.அருள்மொழி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஜெகதீஸ்வரன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் மற்றும் கடலூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நலச்சங்கத்தின் தலைவர் உள்பட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.