மாம்பழங்களுக்கு கட்டுபடியாகும் விலையை நிர்ணயம் செய்ய வேண்டும்குறை தீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் இருந்து மாங்கூழ் ஆலைகளுக்கு கொள்முதல் செய்யப்படும் மாம்பழங்களுக்கு கட்டுபடியாகும் விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினார்கள்.
கரும்பு நிலுவை தொகை
தர்மபுரி மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலக கூடுதல் கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கலெக்டர் சாந்தி தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா, அரூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குனர் பிரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர்கள் பேசியதாவது:-
தர்மபுரி மாவட்டத்தில் கூட்டுறவு சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளில் பலருக்கு நிலுவைத்தொகை வழங்கப்படாமல் உள்ளது. கரும்பு வெட்டும் கூலி உயர்ந்துள்ள நிலையில் கடன் வாங்கி கருப்பு சாகுபடி செய்த பல விவசாயிகள் கடன் மற்றும் வட்டியை செலுத்த முடியாத நிலையில் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும். மாவட்டத்தில் உயர்மின் கோபுரங்கள் அமைக்க நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டு தொகையை விரைவாக வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நியாயமான இழப்பீடு
தர்மபுரி மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் வழங்குவதற்கான ராகி கொள்முதலை விவசாயிகளிடம் தொடங்க வேண்டும். மாவட்டத்தில் சிறுதானிய மதிப்பு கூட்டு பொருட்கள் உற்பத்தி செய்யும் நிறுவனம் தொடர்ந்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். காட்டு பன்றிகளால் விவசாய விளைநிலங்களில் ஏற்படும் பயிர் சேதத்திற்கு வழங்கப்படும் இழப்பீடு மிகவும் குறைவாக உள்ளது. எனவே பயிர் சேதத்தை முறையாக அளவீடு செய்து நியாயமான இழப்பீடு வழங்க வேண்டும்.
கிருஷ்ணகிரி அணையின் உபரிநீர் தர்மபுரி மாவட்டத்தில் 34 ஏரிகளுக்கு வந்து சேரும் வலதுபுற கால்வாயை தூர்வாரி சீரமைக்க வேண்டும். ஈச்சம்பாடி அணையின் வலதுபுற கால்வாயை தூர்வார வேண்டும். இந்த அணையின் உபரி நீரை சிந்தல்பாடி ஏரி உள்ளிட்ட பல்வேறு ஏரிகளுக்கு நிரப்பும் திட்டத்தை விரைவாக செயல்படுத்த வேண்டும். மாங்கூழ் உற்பத்தி ஆலைகளுக்கு கொள்முதல் செய்யப்படும் மாம்பழங்களுக்கு மிகக்குறைவான விலை நிர்ணயிக்கப்படுவதால் விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள். விவசாயிகளுக்கு கட்டுபடியாகும் விலையை நிர்ணயம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் பேசினர்.
தீர்வு காண நடவடிக்கை
இந்த கூட்டத்தில் கலெக்டர் சாந்தி பேசியதாவது:-
சர்க்கரை ஆலைக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு நிலுவை தொகையை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மரவள்ளி கிழங்கு சாகுபடியில் மாவு பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த தோட்டக்கலைத் துறையினர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த கூட்டத்தில் விவசாயிகள் தெரிவித்த கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று விதிமுறைகளின் படி தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கலெக்டர் பேசினார்.
இந்த கூட்டத்தில் வேளாண்மை இணை இயக்குனர் விஜயா, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராமதாஸ், கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் சாமிநாதன், வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் மாது, உள்பட துறை சார்ந்த அதிகாரிகள், விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர்.