நாமக்கல் குறைதீர்க்கும் கூட்டத்தில்ரூ.16.64 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்கலெக்டர் உமா வழங்கினார்
நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ரூ.16 லட்சத்து 64 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் உமா வழங்கினார்.
குறைதீர்க்கும் கூட்டம்
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் உமா தலைமையில் நடந்தது. முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசைமாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கேட்டு மொத்தம் 446 மனுக்களை பொதுமக்கள் கலெக்டரிடம் வழங்கினர்.
இந்த மனுக்களை பெற்றுக் கொண்ட கலெக்டர் பரிசீலினை செய்து உரிய அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
நலத்திட்ட உதவிகள்
தொடர்ந்து தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில் 1,330 திருக்குறளையும் மனப்பாடம் செய்து ஒப்பித்த மாணவிகள் தேவயானி மற்றும் தேவயாழினி ஆகிய இரட்டையர்களுக்கு தலா ரூ.15 ஆயிரம் வீதம் ரூ.30 ஆயிரத்திற்கான காசோலை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 7 மாற்றுத்திறனாளிகளுக்கு அதிநவீன செயற்கை கால், முன்னாள் படை நலன் சார்பில் ஈமச்சடங்கு நிதிஉதவியின் கீழ் 3 நபர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.30 ஆயிரத்திற்கான ஆணை, மேலும், ரூ.3 லட்சத்திற்கு மேல் கொடி நாள் வசூல் செய்த 22 அலுவலர்கள் மற்றும் எய்ட்ஸ் கட்டுப்பாடு அழகு சார்பில் நடைபெற்ற மாரத்தான் நிகழ்வில் வெற்றி 14 பேருக்கு பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ் ஆகியவற்றை கலெக்டர் வழங்கினார். மொத்தமாக ரூ.16 லட்சத்து 64 ஆயிரம் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
அதை தொடர்ந்து நல்லாசிரியர் விருது பெற்ற 9 ஆசிரியர்கள் கலெக்டரிடம் வாழ்த்து பெற்றனர். மேலும் முத்துகாபட்டி துணை சுகாதார நிலைய கட்டிடம் கட்டுவதற்காக நமக்கு நாமே திட்டத்தின் கீழ் தனது பங்களிப்பாக ரூ.11 லட்சம் காசோலைைய டாக்டர் நர்மதா வழங்கினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர் சுமன், தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) பிரபாகரன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.