குறைதீர்க்கும் நாள் கூட்டம்: விவசாய பகுதியில் உள்ள வாய்க்கால்களை தூர்வார கோரிக்கை

கரூரில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அனைத்து விவசாய பகுதியில் உள்ள வாய்க்கால்களை தூர்வார கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2022-11-25 19:28 GMT

குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தலைமை தாங்கினார். கூட்டத்தில் சாயக்கழிவுகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவது, அமராவதி ஆற்றில் கழிவுநீர் கலப்பது அதனால் மாசு படுவதை தடுப்பது, குடகனாறு வாய்க்காலை வகைப்படுத்துவது,

புலியூர் மற்றும் நெரூர் பாலம் அமைப்பது, சாலை வசதிகள், குளித்தலையில் தீயணைப்பு நிலையம் அமைப்பது, வேளாண்மை கல்லூரிக்கு இடம் தேர்வு செய்வது, குடிநீர் குழாய் அமைப்பதற்காக தோண்டப்பட்ட சாலைகளை சீரமைப்பது, சாலைகளில் வேகத்தடை அமைப்பது, மயான கொட்டைகள் அமைப்பது, சாலையோரங்களில் உள்ள கிணறுகளின் ஓரத்தில் தடுப்பு சுவர்கள் அமைப்பது குறித்து கோரிக்கைகள் வைக்கப்பட்டன.

பட்டா திருத்தம்

மேலும் மாணவர்களுக்கு கல்வி கடன் வழங்குவது, பட்டா திருத்தம் தொடர்பு குறித்தும், ஆக்கிரமிப்புகளை அகற்றுவது, குடிநீரில் கழிவுநீர் கலப்பதை தடுப்பது, இடையூறாக உள்ள மதுபான கடைகளை வேறு இடத்திற்கு மாற்றுவது,

கிராமப்புறங்களில் குளங்களைச் சுற்றி மரக்கன்றுகள் நடுவது குறித்தும், சிமெண்டு சாலை, தார் சாலை அமைப்பது குறித்தும், சீமை கருவேல மரங்களை அகற்றுவது குறித்தும், தோகைமலை ஒன்றியத்திற்குட்பட்ட சின்னரெட்டிபட்டி கிராமத்தில் சிறு சமுதாயக்கூடம் அமைப்பது குறித்தும், நெடுஞ்சாலைகளில் குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை சீரமைப்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வைக்கப்பட்டன.

சுங்கச்சாவடிகள் வழியாக செல்லாமல் மாற்றுப்பாதைகளில் செல்லும் வாகனங்களை முறைப்படுத்துவது, அனைத்து விவசாய பகுதியில் உள்ள வாய்க்கால்களை தூர்வாருவது, தென்னிலை பகுதிகளில் பண்ணை குட்டைகள் மற்றும் உழவர் சந்தை அமைப்பது, கிராமப்புறங்களில் மண் சாலை பகுதிகளை கிராமப்புற சாலையாக அமைப்பது, விவசாயிகளுக்கு உரங்கள் தட்டுப்பாட்டை போக்குவது, மணவாடி கந்தாழப்பட்டி பகுதியில் கருவேல மரங்களை 100 நாள் வேலை திட்டம் மூலம் சுத்தப்படுத்துவது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

எச்சரிக்கை

பொதுமக்கள் அளிக்கின்ற கோரிக்கை மனுக்களை காலம் தாழ்த்தாமல் உடனடியாக நிவர்த்தி செய்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். மேலும் வட்டாட்சியர் அலுவலகங்களில் இடைதரகர்களை அனுமதிக்க கூடாது என எச்சரிக்கை விடுத்தார்.

பின்னர் மாநில தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தில் ஒரு பயனாளிக்கு ரூ.10 ஆயிரம்- மதிப்பீட்டில் கத்திரி குழித்தட்டு நாற்றுகளையும், ஒரு பயனாளிக்கு ரூ.5 ஆயிரம்- மதிப்பீட்டில் கீரைவிதைகள் மற்றும் இயற்கை உரங்களும், உணவு மற்றும் சத்துமிகு தானியங்கள் பாதுகாப்பு திட்டத்தில் ஒரு பயனாளிக்கு ரூ.6 ஆயிரம்- மதிப்பீட்டில் சோளம் செயல் விளக்க திடல்களும், தமிழ்நாடு நீடித்த நிலையான பசுமை போர்வை இயக்கத்தில் ஒரு பயனாளிக்கு ரூ.1,500 மதிப்பீட்டில் மரக்கன்றுகளும், வேளாண் எந்திரமயமாக்கல் திட்டத்தில் 5 பயனாளிக்கு ரூ.6,79,000 மதிப்பில் டிராக்டர், ரொட்டவேட்டர், பவர்டில்லர்களும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் ஒரு பயனாளிக்கு சொந்தமான நிலத்தை மென்பதிவேற்றம் செய்ய ஆணை வழங்குதல் என மொத்தம் 11 விவசாயிகளுக்கு ரூ.7,01,500 மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இக்கூட்டத்தில் 148 கோரிக்கை மனுக்கள் வரப்பெற்றன.

Tags:    

மேலும் செய்திகள்