போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் குறைதீர்க்கும் முகாம்
போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் குறைதீர்க்கும் முகாம்
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் போலீஸ் நிலையங்களில் புகார் அளித்து தீர்க்கப்படாமல் உள்ள பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் குறைதீர்க்கும் முகாம் புதன்கிழமை தோறும் நடைபெற்று வருகிறது. இதே போல நேற்றும் குறைதீர்க்கும் முகாம் நடந்தது. இந்த சிறப்பு முகாமை பார்வையிடுவதற்காக நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பிரவேஷ் குமார் வந்திருந்தார். பின்னர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் முன்னிலையில் சிறப்பு முகாமை அவர் தொடங்கி வைத்தார். மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று போலீசாருக்கு அறிவுறுத்தினார்.
நாகர்கோவில், கன்னியாகுமரி, தக்கலை மற்றும் குளச்சல் போலீஸ் துணை சரகங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள போலீஸ் நிலையங்களில் முடிக்கப்படாமல் உள்ள புகார் மனுக்களை விரைந்து முடிக்க மனுதாரர் மற்றும் எதிர்மனுதாரர்களை முகாமுக்கு அழைத்து விசாரணை நடத்தினர். இதன் காரணமாக சிறப்பு முகாமில் ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். அவ்வாறு வந்த மனுதாரர்களை போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் பல்வேறு இடங்களில் அமர வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். ஒவ்வொரு துணை சரகம் வாரியாக வந்த புகார் மனுக்களை அந்தந்த துணை போலீஸ் சூப்பிரண்டுகள் முன்னிலையில் இன்ஸ்பெக்டர்கள் விசாரணை மேற்கொண்டனர்.