புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
ஊருணி தூர்வாரப்படுமா?
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தாலுகா பனங்குடி கிராமத்தில் உள்ள புரைக்களம்பலம் ஊருணி தூர்வாரப்படாமல் உள்ளது. இந்த ஊருணியை பொதுமக்கள் தங்கள் பல்வேறு தேவைகளுக்காக பயன்படுத்துகின்றனர். எனவே ஊருணியை தூர்வாரி கரைகளை பலப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரவீந்திரன், பனங்குடி.
கருவேல மரங்கள் ஆக்கிரமிப்பு
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வைகையாற்றில் சில பகுதிகளில் கருவேல மரங்கள் ஆக்கிரமித்து வளர்ந்துள்ளன. இதனால் நிலத்தடி நீர்மட்டமும் ஆற்றின் தூய்மையும் பாதிக்கப்படும் நிலை உள்ளது. எனவே வைகை ஆற்றை ஆக்கிரமித்து வளர்ந்துள்ள கருவேல மரங்களை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
முத்து கிருஷ்ணன், மானாமதுரை.
நடவடிக்கை தேவை
சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் ஒன்றியம் புழுதிபட்டி-பொன்னமராவதி போன்ற ஊராட்சி சாலைகள் அருகில் மழைக்காலங்களில் தண்ணீர் வடிந்து சென்று கண்மாயில் சேரும் வகையில் சிறு ஓடைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் போதிய பராமரிப்பு இல்லாததால் ஓடைகளில் மரங்கள், செடிகள் வளர்ந்துள்ளன. இதனால் மழைநீர் கண்மாய்களுக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே இதனை அகற்றி ஓடையை பராமரிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மணிமாறன், எஸ்.புதூர்.
நோய் பரவும் அபாயம்
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பேரூராட்சி மல்லிப்பட்டினம் பகுதியில் போதிய வாருகால் வசதி இல்லாததால் மழைக்காலங்களில் கழிவுநீருடன் மழைநீர் தேங்குகிறது. தேங்கி நிற்கும் கழிவுநீரில் கொசுக்கள் உருவாகி பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயமும் ஏற்படுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். முத்துமணி, இளையான்குடி.
விபத்து ஏற்படுத்தும் சாலை
சிவகங்கை மாவட்டம் கானாடுகாத்தானில் இருந்து கொத்தமங்கலம் செல்லும் சாலை குறுகலாக இருப்பதால் அவ்வழியே செல்லும் வாகனங்கள் ஒன்றை ஒன்று முந்தி செல்லும் போது விபத்துகள் அதிகம் நடக்கிறது. மேலும் வாகனங்கள் விலகி செல்லவும் சிரமமாக உள்ளது. எனவே இந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெரியசாமி, கானாடுகாத்தான்.