மீட்பு பணி போட்டிகள்:நாமக்கல் ஆயுதப்படை போலீஸ்காரருக்கு முதல்பரிசு
மீட்பு பணி போட்டிகளில் முதல் பரிசு வென்ற நாமக்கல் ஆயுதப்படை போலீஸ்காரரை சூப்பிரண்டு ராஜேஸ்கண்ணன் வாழ்த்தினார்.
நாமக்கல் மாவட்ட ஆயுதப்படையில் பணிபுரியும் போலீஸ்காரர் பூமிநாதன், திருவள்ளுவர் மாவட்டம் பள்ளிப்பட்டு அதிதீவிரப்படை பயிற்சி பள்ளியில் கடந்த செப்டம்பர் 25-ந் தேதி முதல் அக்டோபர் 14-ந் தேதி வரை 3 வாரங்கள் நடைபெற்ற மாநில பேரிடர் மீட்பு மேலாண்மை பயிற்சியில் கலந்து கொண்டு அவசரகால முதலுதவி, கட்டிட இடிபாடுகளில் சிக்கி கொண்ட நபர்களை மீட்டு எடுத்தல் மற்றும் வெள்ள மீட்பு பணி போன்ற பயிற்சியினை முடித்தார்.
மேலும் அங்கு நடைபெற்ற மீட்பு பணி போட்டிகளில் கலந்து கொண்டு முதல் இடம் பிடித்து பரிசினை வென்றார். இதையடுத்து அவர் நேற்று நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஸ்கண்ணனை சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது ஆயுதப்படை துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன் மற்றும் இன்ஸ்பெக்டர் முரளிகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.