நியாயவிலைக் கடைகளுக்கு இணையாக பசுமைப் பண்ணைக் கடைகளைத் திறக்கவேண்டும் - டிடிவி தினகரன்

காய்கறி விலை உயர்வை கட்டுப்படுத்திட நியாயவிலைக் கடைகளுக்கு இணையாக பசுமைப் பண்ணைக் கடைகளைத் திறக்கவேண்டும் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.;

Update: 2023-07-05 18:27 GMT

சென்னை,

காய்கறி விலை உயர்வை கட்டுப்படுத்திட நியாயவிலைக் கடைகளுக்கு இணையாக பசுமைப் பண்ணைக் கடைகளைத் திறக்கவேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

திமுக அரசு ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகளில் தமிழ்நாடு மக்களின் தலையில் தாங்கமுடியாத அளவிற்கு சுமையை ஏற்றிவருகிறது.

வீடுகளுக்கான மின்கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு ஆகியவை மட்டுமன்றி, வணிக பயன்பாட்டுக்கான மின்கட்டணத்தையும் இரண்டாம் முறையாக உயர்த்தி மக்களை துயரத்தில் தள்ளி உள்ளது. இதன் தொடர்ச்சியாக மக்களின் அத்தியாவசிய பயன்பாட்டிற்கு தேவையான காய்கறிகள், மளிகை பொருட்களின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்திருப்பது பொதுமக்களை மேலும் வேதனைக்கு உள்ளாக்கி இருக்கிறது.

தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தபடி திமுக அரசு பெட்ரோல், டீசலுக்கான மானியம், டோல்கேட்களை மூட மத்திய அரசிடம் வலியுறுத்தி நடவடிக்கை எடுத்திருந்தால் அத்தியாவசிய பொருட்களின் விலையை கட்டுப்படுத்தியிருக்க முடியும். மக்களுக்கு எந்த வகையிலும் பயன் தராத பேனா சின்னத்தை கடலில் வைக்க மத்திய அரசிடம் எடுத்த முயற்சியில் சிறிது இதில் செலுத்தியிருந்தால் கூட மக்களுக்கு பெரிய அளவில் பயன் கிட்டியிருக்கும். மேலும், காய்கறி, மளிகை பொருட்கள் வணிகத்தில் ஈடுபடும் இடைத்தரகர்கள், பதுக்கல்காரர்களை ஒழிக்க இந்த அரசு இதுவரை எந்த விதமான நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

பசுமைப் பண்ணைக் கடைகளை, நியாய விலை கடைகளுக்கு இணையாக திறந்து, விவசாயிகள், உற்பத்தியாளர்களிடம் இருந்து காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்களை ஆண்டு முழுவதும் கொள்முதல் செய்து, பொது மக்களுக்கு வழங்குவதன் மூலம் வெளிச்சந்தையில் ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் விவசாயிகள் உள்ளிட்ட உற்பத்தியாளர்களுக்கு உரிய விலை கிடைப்பதுடன், நுகர்வோருக்கும் குறைந்த விலையில் அத்தியாவசிய பொருட்கள் கிடைத்திட வழிவகை செய்ய முடியும்.

ஆகவே, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தும் வகையில் அனுபவமிக்க மூத்த அதிகாரிகளைக் கொண்டு குழு அமைத்து ஆராய்ந்து பசுமைப் பண்ணைக் கடைகள் மூலம் ஆண்டு முழுவதும் நுகர்வோருக்குத் தேவையான காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்