பச்சிளம் பெண் குழந்தை உயிருடன் மீட்பு

கோவை சிங்காநல்லூரில் கோவில் அருகே, பையில் சுற்றி வீசப்பட்ட பச்சிளம் குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது. அந்த குழந்தைக்கு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Update: 2022-06-08 17:30 GMT

கோவை,

கோவை சிங்காநல்லூரில் கோவில் அருகே, பையில் சுற்றி வீசப்பட்ட பச்சிளம் குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது. அந்த குழந்தைக்கு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பச்சிளம் பெண் குழந்தை

கோவை சிங்காநல்லூர், நீலிக்கோணாம்பாளையத்தில் கோபாலசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலின் அருகே உள்ள நடைபாதை பகுதியில் குழந்தையின் அழுகுரல் கேட்டது. இதையடுத்து அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அந்த பகுதிக்கு ஓடி சென்று பார்த்தனர்.

அப்போது அங்கு ஒரு மஞ்சள் துணிப்பையில் பச்சிளம் பெண் குழந்தை அனாதையாக கிடந்தது. அதன் தொப்புள்கொடி கூட அறுக்கப்பட வில்லை. உடனே அந்தப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இது குறித்து சிங்காநல்லூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

உயிருடன் மீட்பு

பின்னர் அவர்கள் அந்த பெண் குழந்தையை உயிருடன் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அந்த குழந்தையை டாக்டர்கள் பச்சிளம் குழந்தைகளுக்கான வார்டில் சேர்த்து தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.தற்போது அந்த குழந்தை நலமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இருந்தபோதிலும் குழந்தையை தொடர்ந்து டாக்டர்கள் கண்காணித்து வருகிறார்கள். மேலும் இது குறித்து சிங்காநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.இது குறித்து போலீசார் கூறியதாவது:-

தீவிர விசாரணை

குழந்தை தொப்புள்கொடியுடன் கிடந்ததால், பிறந்து சில மணி நேரங்கள்தான் இருக்கும் என்று தெரிகிறது. கள்ளக்காதலில் பிறந்ததால் அவமானம் தாங்க முடியாமல் அந்த குழந்தையை அங்கு வீசிச்சென்றனரா அல்லது பெண் குழந்தை என்பதால் வீசப்பட்டதா என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் அந்தப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதுபோன்று சிங்காநல்லூர் பகுதியில் நேற்று முன்தினம் இரவில் இருந்து காலை வரை பிறந்த குழந்தைகள் குறித்தும் கணக்கெடுக்கப்பட்டு விசாரணை முடுக்கிவிடப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.  பச்சிளம் குழந்தை நடைபாதையில் மீட்கப்பட்ட சம்பவம் சிங்காநல்லூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்