'மாபெரும் தமிழ் கனவு' நிகழ்ச்சி
விழுப்புரத்தில் ‘மாபெரும் தமிழ் கனவு’ நிகழ்ச்சி கலெக்டர் தலைமையில் நடைபெற்றது.
விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் 'மாபெரும் தமிழ் கனவு" என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் பழனி தலைமை தாங்கினார். பாடலாசிரியர் அறிவுமதி, பேச்சாளர் பர்வீன் சுல்தானா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு பேசினர். நிகழ்ச்சியில் கலெக்டர் பழனி பேசியதாவது:-
தமிழ்நாடு முதல்-அமைச்சரின் சிறப்புத்திட்டமான 'மாபெரும் தமிழ் கனவு' எனும் அறிவுசார் திட்டம் விழுப்புரம் மாவட்டத்தில் சிறப்பாக தொடங்கப்பட்டுள்ளது. தேடல்மிக்க மாணவர்கள் பயன்கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ள அறிவாற்றல் புதையல் நிகழ்ச்சியாகும். தமிழின் பெருமிதம், தமிழரின் வாழ்வியல், பண்பாட்டுக்கூறுகள், மரபுசார்ந்த தொழில்நுட்ப அறிவுத்திறன், அறவாழ்வியல், இலக்கிய சுரங்கம் ஆகியவற்றை வளர்ந்து வரும் இளையோருக்கு கொண்டு சேர்த்து அவர்களை விழிப்படைய செய்வது இந்நிகழ்ச்சியின் நோக்கமாகும்.
50 மாணவர்கள் எனும் அடிப்படையில் தமிழில் மிகவும் ஆர்வமாக இருக்கும் பல்துறை மாணவர்களை தேர்வு செய்து இந்நிகழ்ச்சியில் பங்கேற்க வைத்துள்ளார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
கண்காட்சி
இதனைதொடர்ந்து இந்நிகழ்ச்சியை முன்னிட்டு அமைக்கப்பட்டிருந்த புத்தக கண்காட்சி அரங்கு, தொல்பொருள் படிமங்கள் கண்காட்சி அரங்கு, மாணவர்களுக்கான கல்விக்கடன் முகாம் ஆகியவற்றை கலெக்டர் பழனி பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் மண்டல இணை இயக்குனர் உயர்கல்வித்துறை காவேரி, விழுப்புரம் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், அறிஞர் அண்ணா அரசு கலை அறிவியல் கல்லூரி முதல்வர் சிவக்குமார், தெய்வானை அம்மாள் மகளிர் கலை அறிவியல் கல்லூரி முதல்வர் அகிலா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.