பெரிய மாரியம்மன் கோவில் தேரோட்டம்

Update: 2023-08-16 20:32 GMT

பனமரத்துப்பட்டி:-

ஆட்டையாம்பட்டியில் பெரிய மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது. இதி்ல் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தேரோட்டம்

ஆட்டையாம்பட்டியில் உள்ள எட்டுப்பட்டி ஸ்ரீ பெரிய மாரியம்மன் கோவிலில் ஆடி தேர்த்திருவிழா கடந்த 2-ந் தேதி கம்பம் நடுதலுடன் தொடங்கியது. தினசரி சிறப்பு பூஜைகளுடன், சாமி ரத ஊர்வலம் நடைபெற்றது. நேற்று முன்தினம் இரவு சத்தாபரணம், நேற்று காலை தலைமை பூசாரி சக்தி கரகத்துடன் தீமிதித்தார். தொடர்ந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தீமிதித்தனர்.

மதியம் 3 மணிக்கு கோவில் தர்மகர்த்தா ராஜ்மோகன் தலைமையில் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய சாலைகள் வழியாக சென்று கோவிலை அடைந்தது.

மஞ்சள் நீராடுதல்

விழாவில் இன்று (வியாழக்கிழமை) காலை பக்தர்கள் பொங்கல் வைத்து ஆடு, கோழி பலியிடுகின்றனர். இரவு கம்பம் பிடுங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. நாளை (வெள்ளிக்கிழமை) வண்டி வேடிக்கையும், நாளை மறுநாள் (சனிக்கிழமை) வசந்த உற்சவத்துடன் மஞ்சள் நீராடுதலுடன் விழா நிறைவு பெறுகிறது.

சேலம் ஊரக உட்கோட்ட போலீஸ் சூப்பிரண்டு அமலஅட்வின், ஆட்டையாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் அம்சவள்ளி, கொண்டலாம்பட்டி அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் உஷாராணி ஆகியோர் தலைமையில் போலீசார் மற்றும் ஆட்டையாம்பட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் உதயகுமார் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்