அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில்களில் மயான கொள்ளை
ராணிப்பேட்டை மாவட்டத்தில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில்களில் மயானகொள்ளை விழா நடைபெற்றது.
அரக்கோணம்
அரக்கோணம் பழனிப்பேட்டையில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் நேற்று முன்தினம் மகா சிவராத்திரி உற்சவமும், நேற்று மயான கொள்ளை விழாவும் நடந்தது. மயான கொள்ளை விழாவை முன்னிட்டு நேற்று அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. மயானம் நோக்கி சென்று அம்மன் உருவம் பதித்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. விரதமிருந்த பக்தர்கள் காட்டேரி, காளி, சிவன், பார்வதி, உள்ளிட்ட பல்வேறு வேடங்கள் அணிந்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.
பக்தர்கள் வாயில் அலகு குத்தியும், முதுகில் அலகு குத்தி ஆட்டோ இழுத்து சென்றனர். பெண் பக்தர்கள் கையில் தீச்சட்டி ஏந்தி பக்தி பரவத்துடன் சாமி அருள் வந்து ஆடினர். பெரியவர்கள் மற்றும் சிறுவர்கள், குழந்தைகளும் சாமி வேடமணிந்து சாமிக்கு நேர்த்திக்கடனை செலுத்தினர். மாலை 3 மணிக்கு சாமிக்கு அலங்காரம், பூஜைகள் செய்யப்பட்டு கோவிலில் இருந்து அம்மன் ஊர்வலம் மோசூர் சாலையில் உள்ள மயானத்துக்கு சென்றது. ஊர்வலத்தின் போது அங்காளபரமேஸ்வரி அம்மன் சாமி மீது நவதானியங்கள், காய்கறிகள், உப்பு, சுண்டல், கொழுகட்டை, எலுமிச்சை பழம், சில்லறை காசுகள் உள்ளிட்ட பொருட்களை வீசி தங்களின் நேர்த்திக் கடனை செலுத்தினர்.
விழாவில் அரக்கோணம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து பக்தர்கள் வந்து அம்மனை வழிபட்டனர். பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த அரக்கோணம் உதவி போலீஸ் சூப்பிரண்டு யாதவ் கிரிஷ் அசோக் தலைமையில் இன்ஸ்பெக்டர் சாலோமன் ராஜா, சப்-இன்ஸ்பெக்டர் தாசன் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
பனப்பாக்கம்
பனப்பாக்கம் பேரூராட்சியில் ஒச்சேரி சாலையில் உள்ள ஆதி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயான கொள்ளை விழா நடைபெற்றது. விழாவில் அம்மனுக்கு பால், தயிர், நெய், இளநீர், சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டு, பனப்பாக்கம் பேரூராட்சியில் உள்ள அனைத்து வீதிகளிலும் ஊர்வலமாக சென்று பக்தர்களுக்கு காட்சியளித்தார். திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமிதரிசனம் செய்தனர். இதேபோன்று உளியநல்லூர், திருமால்பூர், கீழ்வெண்பாக்கம், நெமிலி உள்ளிட்ட இடங்களிலும் மயான கொள்ளை விழா நடைபெற்றது.
ஆற்காடு நகரில் உள்ள இந்திரா நகர், தண்டு காரன் தெரு, தாருகான் தெரு, காந்திநகர், கிருஷ்ணாபுரம், லேபர் தெரு, டவுன் தெரு, முப்பதுவெட்டி உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து அலங்கரிக்கப்பட்ட அங்காளம்மன் உற்சவர் ஊர்வலமாக சென்று பாலாற்றில் நிலை நிறுத்தப்பட்டு அங்கு மயான கொள்ளை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினார்கள். பல பக்தர்கள் காளி வேடம் உள்ளிட்ட பல்வேறு வேடங்களிலும், அலகு குத்தியும் வழிபாடு செய்தனர்.
இதில் ஆற்காடு மற்றும் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவை முன்னிட்டு ஆற்காடு நகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது. அசம்பாவிதங்களை தவிர்க்க போலீசார் கண்காணிப்பு கோபுரம் அமைத்து கண்காணித்தினர். தீயணைப்பு வாகனம் தயார் நிலையில் நிறுத்தப்பட்டது. திருட்டு சம்பவங்களை தவிர்க்க ஒலிபெருக்கி மூலம் பொது மக்களை உஷார் படுத்தினர்.
ரத்தினகிரியை அடுத்த பூட்டுத்தாக்கு கிராமத்தில் உள்ள பாலாற்றில் நடந்த மயானக்கொள்ளை விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர். விழாவைெயாட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
கலவை
கலவையில் உள்ள பழமை வாய்ந்த அங்காளம்மன் கோவிலில் 119-வது ஆண்டு மயான கொள்ளை திருவிழா நடந்தது. விழாவை முன்னிட்டு காலையில் சிறப்பு அபிஷேகமும், கொடியேற்றமும் நடைபெற்றது. மாலை 4.30 மணி அளவில் சிம்ம வாகனத்தில் அங்காள பரமேஸ்வரி அம்மன் தலைவிரி கோலத்துடன் புறப்பட்டார். பக்தர்கள் முதுகில் அலகு குத்தி கல் ரோலர், தேர், டிராக்டர், வேன்கள் போன்ற வாகனங்களை இழுத்துச் சென்றனர். பெண்கள் அலகு குத்தி, பூ கரகம், தீச்சட்டி ஏந்தி சென்றனர். மாலை 6.30 மணி அளவில் அம்மன் சுடுகாட்டை அடைந்ததும், பக்தர்கள் நேர்த்திக் கடனாக அம்மன் மீது பொருட்களை வீசி எறிந்தனர். இதில் ஆந்திரா, கர்நாடகா மாநிலத்திலிருந்தும், பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.