மூங்கில்துறைப்பட்டில் கல்லறை திருநாள் கிறிஸ்தவர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனை
மூங்கில்துறைப்பட்டில் கல்லறை திருநாள் அனுசாிக்கப்பட்டது.
இறந்த உறவினர்களை நினைவுகூறும் வகையில் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் 2-ந் தேதியை கிறிஸ்தவர்கள் கல்லறை திருநாளாக கடைபிடித்து வருகின்றனர்.
அதன்படி நேற்று உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் கல்லறை திருநாள் கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி விழுப்புரத்தில் கிழக்கு புதுச்சேரி சாலையில் உள்ள கல்லறை தோட்டத்தில் நேற்று காலை முதலே கிறிஸ்தவர்கள் திரண்டு வந்தனர். காலை வேளையில் மழை தூறிக்கொண்டே இருந்தது. இருப்பினும் அதை பொருட்படுத்தாமல் கிறிஸ்தவர்கள் குடைபிடித்தபடி கல்லறை தோட்டத்திற்கு வந்தனர்.
தொடர்ந்து, அங்குள்ள அவர்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களின் கல்லறையை சுத்தம் செய்து மலர்களால் அலங்கரித்தனர். பின்னர் அந்த கல்லறையில் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து மலர்தூவி பிரார்த்தனை செய்து, இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். இதேபோல் மாவட்டம் முழுவதிலும் உள்ள கல்லறை தோட்டத்தில் நேற்று கிறிஸ்தவர்கள் தங்களது முன்னோர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். இதேபோல், கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைப்பட்டு, ஈருடையாம்பட்டில் நேற்று, கல்லறை திருநாள் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அங்குள்ள கல்லரை தோட்டத்தில், உள்ள கல்லறைகள் சுத்தம் செய்யப்பட்டு, பூக்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. தொடர்ந்து மறைந்த தங்களது முன்னோர்களுக்கு, கிறிஸ்தவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். பின்னர் பங்கு தந்தைகளின் சிறப்பு கூட்டு பிரார்த்தனையும் கல்லறை தோட்டத்தில் நடைபெற்றது.
இதே போல் மைக்கேல்புரம், சவேரியார்பாளையம், மூங்கில் துறைப்பட்டு, அருளம்பாடி, விரியூர், பழையனூர், மையனூர், கானாங்காடு, புதூர், சோழம்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கல்லறை தோட்டத்திலும், கூட்டு திருப்பலி நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு, முன்னோர்களுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.
கல்லறை திருநாளை முன்னிட்டு பூக்களின் விலை அதிகரித்துள்ளது. குறிப்பாக சாமந்தி பூ கிலோ ரூ.200 முதல் 400 வரைக்கும், மல்லிகைப்பூ ரூ. 500 முதல் 700 வரைக்கும் விற்கப்பட்டது.