மானியத்தில் புல்வெட்டும் கருவி பெறுவதற்கும், பசுந்தீவனம் வளர்க்கவும் விண்ணப்பிக்கலாம்

மானியத்தில் புல்வெட்டும் கருவி பெறுவதற்கும், பசுந்தீவனம் வளர்க்கவும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-06-16 18:54 GMT

புல்வெட்டும் கருவி

அரியலூர் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்பு துறையின் மூலம் 2023-24-ம் ஆண்டிற்கு தீவன அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 50 சதவீத மானியத்தில் மின்சாரத்தால் இயங்கும் புல்வெட்டும் கருவி 50 பயனாளிகளுக்கு வழங்கப்படவுள்ளது. 50 சதவீத அரசு மானியத்திலும், 50 சதவீத பயனாளி பங்குத்தொகை கொண்டும் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் பயனாளிகள் இதுவரை எந்த திட்டத்திலும் அரசு மானியத்தில் புல்வெட்டும் கருவியை பெறாதவர்களாக இருக்க வேண்டும். மேலும் 0.25 ஏக்கர் நிலத்தில் தீவன புல் பயிரிட்டு இருக்க வேண்டும்.

குறைந்தது 2 பசு அல்லது எருமை வளர்க்கும் விவசாயிகளுக்கு புல்வெட்டும் கருவி வழங்கப்படவுள்ளது. பெண் விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். எனவே இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் கால்நடை வளர்ப்பவர்கள் தங்கள் கிராமத்திற்கு அருகே உள்ள கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரை அணுகி திட்ட விவரங்களை பெற்று உரிய படிவத்தில் தங்களுடைய புகைப்படம், குடும்ப அட்டையின் நகல், செல்போன் எண், ஆதார் எண், தங்கள் பெயரில் உள்ள நிலத்திற்கான சான்று மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவற்றுடன் வருகிற 20-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.

தீவன பயிர்கள்

இதேபோல் கால்நடை பராமரிப்பு துறையின் மூலம் தீவன அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 2023-24-ம் ஆண்டிற்கு தென்னை மற்றும் பழத்தோட்டங்களில் ஊடுபயிராக பசுந்தீவனம் வளர்க்க பெரம்பலூர் மாவட்டத்திற்கு 20 ஏக்கர் இலக்கீடு ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் விவசாயிகளுக்கு, ஒரு ஏக்கருக்கு ரூ.3 ஆயிரம் முதல் ஒரு எக்டேருக்கு ரூ.7 ஆயிரத்து 500 வரை அரசால் மானியமாக வழங்கப்படுகிறது. மேலும் குறைந்தது 0.50 ஏக்கர், அதிகபட்சமாக 1 எக்டேர் நிலப்பரப்பில் தொடர்ந்து பல்லாண்டுகள் பயன் தரும் தீவன பயிர்களை ஊடுபயிராக பயிரிட்டு 3 வருட காலம் பராமரிக்க வேண்டும்.

பசுந்தீவனம் உற்பத்தி செய்ய விருப்பமுள்ள சிறு மற்றும் குறு விவசாயிகள் மற்றும் பெண் விவசாயிகள் முக்கியமாக எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. ஆகவே இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் தென்னை மற்றும் பழத்தோட்டம் உள்ள விவசாயிகள் தங்கள் கிராமத்திற்கு அருகில் உள்ள கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரை அணுகி திட்ட விவரங்களை பெற்று உரிய படிவத்தில் தங்களுடைய புகைப்படம், குடும்ப அட்டையின் நகல், செல்போன் எண், ஆதார் எண், தங்கள் பெயரில் உள்ள நிலத்திற்கான சான்று மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவற்றுடன் வருகிற 20-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும், என்று கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்