பேத்தியை மீட்டு தரக்கோரி பாட்டி மனு
பேத்தியை மீட்டு தரக்கோரி பாட்டி மனு கொடுத்துள்ளார்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு பெண் ஒருவர் தனது மகள் மற்றும் பேரனுடன் வந்து, மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் ஒரு மனு கொடுத்தார். அதில், பிளஸ்-1 படித்து கொண்டிருந்த எனது பேத்தியை கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் கள்ளக்குறிச்சியை சேர்ந்த ரஞ்சித் என்பவர் கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்தது தொடர்பாக மங்களமேடு போலீஸ் நிலையத்தில் போக்சோ வழக்கு நிலுவையில் உள்ளது. பின்னர் எனது பேத்தியை கடந்த அக்டோபர் மாதம் மீட்டோம். இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் எனது பேத்தியை மீண்டும் ரஞ்சித் ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று விட்டார். மேலும் எனது பேத்தி, உறவினரான ஒரு பெண்ணுடன் செல்போனில் பேசியுள்ளார். இது குறித்து அந்த பெண்ணிடம் எனது மகன் செல்போன் மூலம் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண், அவரது மகள், உறவினர் ஒருவருடன் சேர்ந்து வந்த என்னையும், எனது மகள், பேரன் ஆகியோரையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்து சென்றனர். எனவே அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது பேத்தியை மீட்டு தருவதோடு, அவரை கடத்தி சென்ற ரஞ்சித் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தார்.