கார் மோதி பாட்டி-பேரன் பலி
அன்னூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் பாட்டி-பேரன் பலியானார்கள்.
அன்னூர்
அன்னூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் பாட்டி-பேரன் பலியானார்கள்.
இந்த பரிதாப சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்
கோவையை அடுத்த அன்னூர் அய்யப்பன் ரெட்டி புதூரை சேர்ந்தவர் வேலம்மாள் (வயது 85). இவருடைய மகன்கள் ரமேஷ், அசோக்குமார் (37). ரமேஷின் மகன் ஜெயராம் (12), இவன் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான்.
இந்த நிலையில் அசோக்குமார் நேற்று முன்தினம் இரவு தனது மோட்டார் சைக்கிளில் தாய் வேலம்மாளையும், அண்ணன் மகன் ஜெயராமையும் அழைத்து கொண்டு சத்தி ரோட்டில் சென்று கொண்டிருந்தார்.
அண்ணாநகர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த கார் கண்ணிமைக்கும் நேரத்தில் அசோக்குமார் மோட்டார் சைக்கிளில் மீது மோதியது.
பேரன்-பாட்டி பலி
இதில் தூக்கி வீசப்பட்ட ஜெயராம், வேலம்மாள் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். அசோக்குமாருக்கு காலில் மட்டும் காயம் ஏற்பட்டது. அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு அன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு ஜெயராமை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தொடர்ந்து வேலம்மாளுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
சோகம்
இந்த சம்பவம் குறித்து அன்னூர் போலீசார் விசாரணை நடத்தி, விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர் புளியம்பட்டியை சேர்ந்த சின்னசாமி (66) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் பாட்டியும், பேரனும் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.