செம்மிபாளையம் ஊராட்சி கிராம சபை கூட்டம்
பல்லடம் அருகே செம்மிபாளையம் ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் கிறிஸ்துராஜ் பங்கேற்றார். இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக உரையாற்றினார்.
பல்லடம்
பல்லடம் அருகே செம்மிபாளையம் ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் கிறிஸ்துராஜ் பங்கேற்றார். இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக உரையாற்றினார்.
கிராம சபை கூட்டம்
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பல்லடம் ஒன்றியம் செம்மிபாளையம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடந்தது. கிராம சபை கூட்டத்தில் எல்லோருக்கும் எல்லாம் என்ற தலைப்பில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக உரையாற்றினார். அதை தொடர்ந்து கலெக்டர் கிறிஸ்துராஜ் கலந்து கொண்டு பேசியதாவது:-
கிராமசபை கூட்டத்தில் மத்திய, மாநில அரசுகளால் கிராமபுற மேம்பாட்டிற்காக செயல்படுத்தப்படும் திட்டங்கள் எடுத்துரைக்கப்படுகிறது. ஊராட்சிகளின் வரவு, செலவு கணக்குகள், புதியதாக மேற்கொள்ளப்படும் வளர்ச்சி திட்ட பணிகள் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்படுகிறது. வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை, கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.மேலும் புதிதாக கட்டப்படும் வீடுகள், வணிக வளாகங்கள், கட்டடங்கள் அனுமதி வழங்கும் போது மழை நீர் சேகரிப்பு அமைப்பு அமைக்கப்பட்டுள்ளதா? என்பதை உறுதி செய்த பின்னரே அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் 8 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.6 லட்சத்து 20ஆயிரம் மதிப்பீட்டில் சுய தொழில் தொடங்குவதற்கான கடனுதவிகளை கலெக்டர் வழங்கினார். 38 பேர்களுக்கு கண் கண்ணாடி வழங்கப்பட்டது. முன்னதாக கிராம சபைக்கூட்டத்தில் தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் மகளிருக்கு கட்டணமில்லா பஸ் பயண திட்டம், முதல்-அமைச்சரின் காலை உணவுத்திட்டம், புதுமைப்பெண் திட்டம், நான் முதல்வன் திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் ஆகிய திட்டங்களின் காணொலி பொதுமக்களின் பார்வைக்கு காட்சி படுத்தப்பட்டது.