121 ஊராட்சிகளில் நாளை கிராம சபை கூட்டம்

உள்ளாட்சி தினத்தையொட்டி 121 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நாளை நடக்கிறது.

Update: 2022-10-30 19:00 GMT

தமிழக அரசின் உத்தரவின்படி உள்ளாட்சி தினத்தையொட்டி நாளை (செவ்வாய்க்கிழமை) பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 121 கிராம ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம், அந்தந்த ஊராட்சி மன்ற தலைவர்களால் நடத்தப்பட உள்ளது. இதில் துணைத்தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள் ஆகியோர் கிராம சபை கூட்டத்தில் தவறாது கலந்து கொண்டு, கிராம மக்களுக்கு என்னென்ன தேவை என்பதை கேட்டறிதல், அரசு நலத்திட்டங்களை கூட்டத்தில் வழங்குதல், அரசு நிர்வாகத்தில் உள்ள குறைபாடுகளை மக்களிடையே கேட்டறிய வேண்டும். மேலும், கிராம சபை கூட்டத்தில் கூட்டப்பொருள்கள் பற்றி விவாதிக்க வேண்டும். கிராம சபை கூட்டத்தில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அனைத்து துறை வாரியான அலுவலர்கள் தவறாது கிராம சபை கூட்டங்களில் கலந்து கொள்வதோடு, துறை தொடர்பான திட்டங்கள் பொதுமக்கள் நன்கு அறியும் வகையில் எடுத்துக் கூறிட வேண்டும்.

கிராம சபை கூட்டம் நல்ல முறையில் நடைபெறுவதை கண்காணிக்க ஒவ்வொரு ஊராட்சிக்கும் சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலரால் (கிராம ஊராட்சிகள்) பற்றாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். வட்டாரம் வாரியாக மாவட்ட நிலை அலுவலர்கள், மண்டல அலுவலர்களாக கிராம சபை கூட்டம் நடைபெறுவதை மேற்பார்வையிட நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே கிராம சபை கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளும், பொதுமக்களும் கலந்து கொண்டு கிராம ஊராட்சிகளின் வெளிப்படையான நிர்வாகத்திற்கு வழிவகுத்து தக்க ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்