அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம்

அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நாளை நடக்கிறது.

Update: 2022-09-30 18:45 GMT

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நாளை (ஞாயிற்றுக்கிழமை) பெரம்பலூர் மாவட்டத்தில் 121 ஊராட்சிகளிலும், அரியலூர் மாவட்டத்தில் 201 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம், அந்தந்த ஊராட்சி மன்ற தலைவர்களால் நடத்தப்பட உள்ளது. ஊராட்சி மன்ற துணைத் தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள் ஆகியோர் கிராம சபை கூட்டத்தில் தவறாது கலந்து கொண்டு, கிராம மக்களுக்கு என்னென்ன தேவை என்பதை கேட்டறிதல் வேண்டும். அரசு நலத் திட்டங்களை கூட்டத்தில் வழங்குதல் வேண்டும். அரசு நிர்வாகத்தில் உள்ள குறைபாடுகளை மக்களிடையே கேட்டறிதல் வேண்டும். மேலும் கூட்டத்தில் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் தாங்கள் வாக்காளர்களாக சார்ந்துள்ள கிராம ஊராட்சிகளில் நடைபெறும் கிராம சபை கூட்டங்களில் பங்கேற்க வேண்டும். கிராம சபை கூட்டம் நல்ல முறையில் நடைபெறுவதை கண்காணிக்க ஒவ்வொரு ஊராட்சிக்கும் சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலரால் (கிராம ஊராட்சிகள்) பற்றாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வட்டாரம் வாரியாக மண்டல அலுவலர்கள் கிராம சபை கூட்டம் நடைபெறுவதை மேற்பார்வையிட நியமிக்கப்பட்டுள்ளனர். கிராம சபை கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளும், பொதுமக்களும், விவசாயிகளும் கலந்து கொண்டு கிராம ஊராட்சிகளின் வெளிப்படையான நிர்வாகத்திற்கு வழிவகுத்து தக்க ஒத்துழைப்பு தர வேண்டும். இந்த தகவல் பெரம்பலூர்-அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் இருந்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்