உள்ளாட்சி அமைப்புகளில் கிராமசபை, பகுதி சபை கூட்டம்
உள்ளாட்சி தினத்தையொட்டி, நெல்லை மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் கிராமசபை, பகுதி சபை கூட்டங்கள் நேற்று நடந்தன.
இட்டமொழி:
நெல்லை மாவட்டத்தில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு உள்ளாட்சி அமைப்புகளில் நேற்று கிராமசபை, பகுதி சபை கூட்டங்கள் நடத்தப்பட்டன. பாளையங்கோட்டை யூனியன் புதுக்குளம் பஞ்சாயத்து கிராமசபை கூட்டம் நடைபெற்றது. பஞ்சாயத்து தலைவர் சி.முத்துக்குட்டிபாண்டியன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் எம்.அந்தோணியம்மாள் முன்னிலை வகித்தார். மேலும் கிராம நிர்வாக அலுவலர் சுடலைமுத்து, ஊர் நல அலுவலர் சாந்தி அற்புதரமணி, விவசாய அலுவலர் ஸ்ரீமதி, தலைமை ஆசிரியர் நெல்லையப்பர், அங்கன்வாடி பணியாளர் ஜெயவைதேகி, வார்டு கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
குமாரபுரம் பஞ்சாயத்து கிராமசபை கூட்டம் நாலந்துலா கிராமத்தில் தலைவர் அனிதா பிரின்ஸ் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் வேளாண்மை துறை மூலம் அரசு வழங்கும் அனைத்து நலத்திட்ட உதவிகளையும் கிராம மக்களுக்கு கிடைக்க ஏற்பாடு செய்வது, பொது இடங்களில் குப்பை கொட்டினால் அபராதம் விதிப்பது என்பன உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பிளாஸ்டிக் ஒழிப்பு திட்டத்தின் கீழ் அனைவருக்கும் மஞ்சள் பை வழங்கப்பட்டது.
இலங்குளம் பஞ்சாயத்து கிராம சபை கூட்டம் பரப்பாடி அருகே உள்ள காமராஜ் நகரில் நடைபெற்றது. கூட்டத்துக்கு பஞ்சாயத்து தலைவர் வி.இஸ்ரவேல் பிரபாகரன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் நாங்குநேரி ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் எஸ்.அருள்ராஜ் டார்வின், பஞ்சாயத்து துணைத்தலைவர் விஜி, கிராம நிர்வாக அலுவலர் முத்துசாமி, வார்டு உறுப்பினர்கள் நெல்சன், சுதா, ஊராட்சி செயலர் முருகன் மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
அம்பை நகராட்சி 21 வார்டுகளிலும் வார்டு குழு- பகுதி சபா கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அப்பகுதி வார்டு கவுன்சிலர்கள் மற்றும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட வார்டு சபா குழு உறுப்பினர்கள் மற்றும் நகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர். நகரசபை தலைவர் கே.கே.சி.பிரபாகரன், நகராட்சி ஆணையாளர் ராஜேஸ்வரன், சுகாதார ஆய்வாளர் சிதம்பர ராமலிங்கம், பணி மேற்பார்வையாளர் சோலைச்சாமி, நகரமைப்பு ஆய்வாளர் ஷேக் அப்துல் காதர், வருவாய் ஆய்வாளர் நடராஜன் மற்றும் நகராட்சி அலுவலர்கள் ஒவ்வொரு பகுதியிலும் நடந்த வார்டு சபா கூட்டத்தில் கலந்துகொண்டு பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றனர். நகராட்சி பகுதிகளில் முதல் முறையாக நடைபெறுவதால் பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டு கோரிக்கை மனுக்கள் மற்றும் புகார்களை தெரிவித்தனர்.
மூலைக்கரைப்பட்டி நகர பஞ்சாயத்து வார்டு பகுதி சபா கூட்டம் சின்னமூலைக்கரையில் நடைபெற்றது. நகர பஞ்சாயத்து தலைவர் கு.பார்வதி மோகன் தலைமை தாங்கினார். நகர பஞ்சாயத்து செயல் அலுவலர் இரா.நடராஜன் தீர்மானங்களை வாசித்தார். கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
திசையன்விளை பேரூராட்சியில் பகுதி சபா கூட்டம் அதன் தலைவர் ஜான்சிராணி முருகானந்தம் தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் வி.பி.ஜெயக்குமார் முன்னிலை வகித்தார். கூட்டம் 4, 5, 15-வது வார்டுகளில் நடந்தது. வார்டு கவுன்சிலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் குடிநீர் குழாய் இணைப்பு, குடிநீர் வினியோகம், சாலை வசதி உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி பொதுமக்கள் மனு கொடுத்தனர். கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக பேரூராட்சி தலைவர் உறுதியளித்தார்.
வள்ளியூர் பேரூராட்சி பகுதியில் உள்ள 18 வார்டுகளிலும் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு பகுதி சபா கூட்டம் நடந்தது. 10 மற்றும் 11-வது வார்டு பகுதியில் நடந்த கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் ராதா ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் கண்ணன், செயல் அலுவலர் சுஷ்மா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக நெல்லை தி.மு.க. எம்.பி. ஞானதிரவியம் கலந்து கொண்டு பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார். நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள் குணசுந்தரி, மாடசாமி, மாணிக்கம், ஆபிரகாம், பொன்பாண்டி, தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் நம்பி, வள்ளியூர் நகர செயலாளர் சேதுராமலிங்கம், மாவட்ட பிரதிநிதிகள் மாடசாமி, நயினார், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் ராஜா, தகவல் தொழில்நுட்ப அணி லெட்சுமணன், வள்ளியூர் நகர இளைஞரணி அமைப்பாளர் தில்லைராஜா, சுகாதார ஆய்வாளர் ஆறுமுகம், சுகாதார மேற்பார்வையாளர் டேனியல், அரசு ஊழியர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.