வரதட்சணை கொடுமையால் தீக்குளித்து பட்டதாரி பெண் தற்கொலை

பெண்ணாடம் அருகே வரதட்சணை கொடுமையால் பட்டதாரி பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக தனியார் பள்ளி ஆசிரியர் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2023-09-10 18:45 GMT

பெண்ணாடம்

பட்டதாரி பெண்

பெண்ணாடம் பேரூராட்சிக்குட்பட்ட திருமலை அகரம் கிராமத்தை சேர்ந்தவர் விஸ்வலிங்கம் மகள் காயத்ரி(வயது 25). பட்டதாரியான இவருக்கும், அரியலூர் மாவட்டம், சிலப்பனூர் கிராமத்தை சேர்ந்த அருள்மணி மகன் வீரமணி என்பவருக்கும் கடந்த 2021-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு தேஜேஸ்வரன்(1½) என்ற ஆண் குழந்தை உள்ளது. திருமணத்தின்போது பெண் வீட்டார் 15 பவுன் நகை உள்ளிட்ட சீர் வரிசை பொருட்களை மாப்பிள்ளை வீட்டாருக்கு கொடுத்தனர். வீரமணி வேப்பூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

வீ்ட்டை விட்டு துரத்தினர்

இந்த நிலையில் திருமணத்துக்கு முன்பு வீரமணி வேலையில் இருப்பதாகவும், எனவே திருமணத்துக்கு பிறகு வீடு கட்டி விடுவேன் என்று விஸ்வலிங்கம் குடும்பத்தினரிடம் சொல்லி ஏமாற்றி காயத்ரியை திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

அதன்படி திருமணத்துக்கு பிறகு வீடு கட்டித்தருமாறு காயத்ரி கேட்டதற்கு வீரமணி, உனது தந்தையிடம் போய் பணம் வாங்கி வந்தால் வீடு கட்டி தருவதாக கூறி அவரும், இவரது அம்மா பட்டத்தாள், தந்தை அருள்மணி, அண்ணன் வேலுமணி ஆகிய 4 பேரும் சேர்ந்து காயத்ரியை திட்டி கழுத்தில் இருந்த தாலியை பிடுங்கிக்கொண்டு வீரமணிக்கு வேறு திருமணம் செய்து வைக்கிறோம் என கூறி அவரை வீட்டை விட்டு துரத்தியுள்ளனர்.

தீக்குளிப்பு

இதுகுறித்து விஸ்வலிங்கம் கொடுத்த புகாரின் பேரில்அரியலூர் அனைத்து மகளிர் போலீசார் இரு தரப்பினரையும் அழைத்து விசாரணை நடத்தினர். அப்போது வீரமணி, தனியாக வீடு கட்டிய பின் காயத்ரியை அழைத்து செல்வதாகவும் அதுவரை தாய் வீட்டிலேயே இருக்குமாறு கூறியுள்ளார். தொடர்ந்து தாலியை தருமாறு காயத்ரி கேட்டபோது வீரமணி, இவரது தாய், தந்தை மற்றும் அண்ணன் ஆகிய 4 பேரும் சேர்ந்து காயத்ரியை அசிங்கமாக திட்டி உள்ளனர்.

இதனால் விரக்தி அடைந்து வீட்டுக்கு வந்த காயத்ரி மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதில் அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் காயத்ரியின் உடலில் பற்றி எரிந்த தீயை அணைத்து அவரை சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

4 பேர் மீது வழக்கு

இதுகுறித்து விஸ்வலிங்கம் கொடுத்த புகாரின் பேரில் வீரமணி உள்ளிட்ட 4 பேர் மீதும் பெண்ணாடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் திருமலை அகரம் கிராமத்தில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்