தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை அளிக்க பட்டதாரி ஆசிரியர்கள் கூட்டமைப்பு கோரிக்கை!
தீபாவளி பண்டிகை வருகிற ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட உள்ளது.;
சென்னை,
தீபாவளி பண்டிகை வருகிற 12ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளியையொட்டி, பட்டாசுகள் வாங்குவது, புத்தாடைகள் வாங்குவது என மக்கள் பண்டிகையை கொண்டாட தயாராகி வருகின்றனர். அத்துடன், பட்டாசு மற்றும் ஜவுளி கடைகளிலும் விற்பனை களைகட்டி வருகிறது.
இது ஒருபுறமிருக்க, ஞாயிற்றுக்கிழமை தீபாவளி வருவதால், சனிக்கிழமை ஒரு நாளும் சேர்ந்து வழக்கமான வார இறுதி விடுமுறை போல் முடிந்துவிடுமோ என்ற கலக்கம் பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் மட்டுமல்லாமல் அரசு ஊழியர்கள், தனியார் ஊழியர்களிடமும் உள்ளது.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை தீபாவளி என்பதால் மறுநாள் திங்கட்கிழமை விடுமுறை அளிக்க வேண்டும் என பட்டதாரி ஆசிரியர்கள் கூட்டமைப்பு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்துள்ளனர். வெளியூர் செல்லும் பொதுமக்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவர்களின் நலன் கருதி விடுமுறை அளிக்குமாறு கோரிக்கை வைத்துள்ளனர்.