சாலையோர வியாபாரிகள் எண்ணிக்கையை ஜி.பி.எஸ். கருவி மூலம் கணக்கெடுக்க திட்டம்
சாலையோர வியாபாரிகள் எண்ணிக்கையை ஜி.பி.எஸ். கருவி மூலம் கணக்கெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
திருச்சி:
சாலையோர வியாபாரிகள்
திருச்சி மாநகராட்சியில் கொரோனா தொற்றுக்கு முன்பு சுமார் 3,500 சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது. நடப்பு ஆண்டு இந்த எண்ணிக்கை 8 ஆயிரத்தை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தநிலையில் சாலையோர வியாபாரிகள் ஒழுங்குபடுத்தும் திட்டத்தை பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் செயல்படுத்த ஒரு குழுவை அமைக்க திருச்சி மாநகராட்சிக்கு நகராட்சி நிர்வாகத்துறை உத்தரவிட்டது. இதற்காக ஏற்கனவே ஆய்வுகள் நடத்தப்பட்டு, ஒரு குழுவுக்கு 6 பேர் வீதம் வியாபாரிகளின் பிரதிநிதிகளை நியமிக்க திட்டமிடப்பட்டு இருந்தது.
ஜி.பி.எஸ். கருவி
ஆனால், அந்த கணக்கெடுப்பை குற்றம்சாட்டி, அதை வியாபாரிகள் ஏற்கவில்லை. இதனால், நகராட்சி நிர்வாகத்துறை தனது நேரடி மேற்பார்வையில் ஜி.பி.எஸ்.கருவி மூலம் கணக்கெடுப்பு நடத்த முன்வந்துள்ளது. அதன்படி, சாலையோர வியாபாரிகளின் புகைப்படங்கள் மற்றும் புவியியல் இருப்பிடங்கள், அவர்களின் சான்றுகளுடன் பதிவு செய்யப்பட உள்ளது.
மேலும், ஜி.பி.எஸ். கருவி மூலம் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பை குறைகூறவோ, கேள்விக்கு உட்படுத்தவோ முடியாது என்றும் கூறப்படுகிறது. இந்த முறையில் ஒருமுறை சாலையோர வியாபாரிகள், விற்பனையாளர் இடம் பெயர்ந்தாலும் அவரை மீண்டும் பதிவு செய்ய அனுமதிக்காது.
கணக்கீடு
முந்தைய ஆய்வுகளில் இது போன்ற நெறிமுறை பயன்படுத்தப்படவில்லை. விற்பனையாளர்களுக்கு இடையூறாக கருதப்படும் வணிக தெருக்களில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த அனுமதிக்கப்பட்ட மற்றும் தடை செய்யப்பட்ட பகுதிகள் குறித்தும் பதிவு செய்யப்படும். இவர்களை கணக்கீடு செய்யும் பணியை நகராட்சி நிர்வாகத்துறை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்க உள்ளது.