போதைப் பொருள் விற்பவர்களை ஒடுக்க அரசு எந்த ஒரு தயக்கமும் காட்டாது - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

போதைப் பொருள் விற்பவர்களை ஒடுக்க அரசு எந்த ஒரு தயக்கமும் காட்டாது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

Update: 2022-08-11 06:25 GMT

சென்னை,

தமிழகத்தில் போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்த நிலையில், 'போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு' என்ற திட்டத்தை சென்னை கலைவாணர் அரங்கில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரத்தையும் தொடங்கி வைத்தார்.

அதன் பின்னர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் போதை ஒழிப்பு உறுதிமொழியை அதிகாரிகள், மாணவர்கள் என அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.

நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

போதைப்பொருள் தடுப்பு பணிகளில் காவலர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் பங்கு மிக முக்கியமானது. பெற்றோர்கள்,ஆசிரியர்களும் சேர்ந்து தான் இதை தடுக்க வேண்டும்

தங்கள் பிள்ளைகளோடு பெற்றோர்கள் அதிக நேரம் பேச வேண்டும். குழந்தைகளிடம் அன்போடு பேசுங்கள், எந்த காரணத்திலும் குழந்தைகளை விட்டு விடாதீர்கள். கண்டிப்பு அவசியம்தான், அளவில்லாத கண்டிப்பும் ஆபத்தில்தான் முடியும்.

மற்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போது ஒரு மகிழ்ச்சி இருக்கும். ஆனால், இந்த நிகழ்ச்சியில் அப்படி எனக்கு இல்லை. போதைப் பொருள்கள் பயன்படுத்துவது அதிகமாக இருப்பது எனக்கு வருத்தம் அளிக்கிறது.

போதைப் பொருள் விற்பவர்களை ஒடுக்க அரசு எந்த ஒரு தயக்கமும் காட்டாது. போதை போன்ற சமூக நோய்களை ஒழிக்க அனைவரும் கைகோர்க்க வேண்டும். போதைக்கு தெரிந்த ஒரே பாதை அழிவு பாதை. போதைக்கு காரணங்களை தேடாதீர்கள்; பிரச்னைக்கு முடிவு காணுங்கள்.

போதை என்பது தனிமனித பிரச்சனை அல்ல; சமூக பிரச்சனை. போதைப் பொருள் தடுப்பு சட்டத்தை கடுமையாக்க அரசு முடிவு செய்துள்ளது. போதைப் பொருள் தடுப்பு தொடர்பாக சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட உள்ளது.

போதைப்பொருட்கள் அதிகமாக விற்பனையாகும் இடங்களை அதிகமாக கண்காணிக்க வேண்டும். ஒவ்வொரு காவலர்களும் தனது எல்லைக்குள் போதைப்பொருள் இல்லை என உறுதிமொழி ஏற்க வேண்டும். சர்வாதிகாரியாக செயல்பட்டு தமிழகத்தில் போதைப்பொருளை ஒழிப்பேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்