பாலம் உடைந்ததால் அரசு டவுன் பஸ் போக்குவரத்து நிறுத்தம்
கறம்பக்குடி அருகே பாலம் உடைந்ததால் அரசு டவுன் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் சுமார் 7 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று வருகிறார்கள்.
டவுன் பஸ்
கறம்பக்குடி அருகே ஆத்தங்கரை விடுதி ஊராட்சியை சேர்ந்த மேல வாண்டான்விடுதி கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். பல ஆண்டுகளாக இந்த கிராமத்திற்கு பஸ் வசதி இல்லாமல் இருந்தது.
அப்பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கையை ஏற்று கடந்த 3 ஆண்டுகளாக அந்த வழித்தடத்தில் காலை மற்றும் மாலை நேரங்களில் ஒரு அரசு டவுன் பஸ் இயக்கப்பட்டது.
இதனால் கறம்பக்குடி, மழையூர், ஆலங்குடி பகுதிகளில் படிக்கும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் பயன் அடைந்து வந்தனர்.
பாலம் உடைந்தது
இந்தநிலையில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு மேல வாண்டான்விடுதியில் விநாயகர்கோவில் அருகே சாலையில் போடப்பட்டிருந்த சிறு பாலம் உடைந்து பள்ளம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த வழித்தடத்தில் இயக்கப்பட்ட அரசு டவுன் பஸ் நிறுத்தப்பட்டது. இதனால் வாண்டான்விடுதி, மேலவாண்டான்விடுதி, ஆத்தியடிப்பட்டி, ஆத்தங்கரை விடுதி உள்ளிட்ட கிராமங்களில் இருந்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகள் அவதியடைந்து வருகின்றனர். தினமும் 5 முதல் 7 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று பஸ் ஏறி செல்லும் அவலம் நீடிக்கிறது. மேலும் சாலையில் ஆபத்தான நிலையில் உள்ள பள்ளத்தால் அசம்பாவிதம் ஏற்படும் வாய்ப்பும் உள்ளது. எனவே மாணவ-மாணவிகளின் நலன்கருதி உடைந்த பாலத்தை உடனே சீரமைத்து அரசு டவுன் பஸ் தொடர்ந்து இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.