அரசு டாஸ்மாக் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடியில் அரசு டாஸ்மாக் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தூத்துக்குடியில் தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் வெங்கடேசன் தலைமை வகித்தார். மாநிலச் செயலர் முருகானந்தம் முன்னிலை வகித்தார். மாநில துணைத் தலைவர் மரகதலிங்கம் வரவேற்றார். தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்க சிறப்புத் தலைவர் கு.பாலசுப்ரமணியன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.
டாஸ்மாக்கில் 19 ஆண்டுகளாக பணி புரியும் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அனைவருக்கும் கால முறை ஊதியம் வழங்க வேண்டும். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தும் வகையில் எவ்வித அனுமதியுமின்றி செயல்படும் தனியார் பார்களை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலாண்மை இயக்குனரின் ஊழியர் விரோத நடவடிக்கையை கைவிடவேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் டாஸ்மாக் பணியாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.