குறுவை நெற்பயிர்களுக்கு காப்பீட்டு திட்டத்தை அரசு செயல்படுத்த வேண்டும் -அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

விவசாயிகள் பாதிப்பு: குறுவை நெற்பயிர்களுக்கு காப்பீட்டு திட்டத்தை அரசு செயல்படுத்த வேண்டும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.

Update: 2023-09-22 18:40 GMT

சென்னை,

பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் தொடர்ந்து 3-வது ஆண்டாக நடப்பாண்டிலும் குறுவை நெற்பயிர்களுக்கு பயிர்க்காப்பீடு வழங்கப்படவில்லை. காவிரியில் போதிய அளவு தண்ணீர் திறந்து விடப்படாததால், மூன்றரை லட்சம் ஏக்கருக்கும் கூடுதலான பரப்பளவில் குறுவை நெற்பயிர்கள் வாடுகின்றன.

அவற்றில் இரண்டு லட்சத்திற்கும் கூடுதலான பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்களை காப்பாற்றவே முடியாது என்று விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

அவற்றுக்கான இழப்பீட்டை பெறுவதற்கான வாய்ப்பு பயிர்க்காப்பீடு மூலம் விவசாயிகளுக்கு ஏற்படுத்தி தரப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது. குறுவை நெற்பயிர்களுக்கான காப்பீட்டுத்திட்டத்தை தமிழக அரசு உடனடியாக செயல்படுத்தவேண்டும்.

குறுவை பயிர்களுக்கான காப்பீட்டுத்தேதி ஏற்கனவே முடிவடைந்து விட்ட நிலையில், நடப்பாண்டை சிறப்பு நேர்வாகக் கருதி இம்மாத இறுதி வரை காப்பீட்டை பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

பயிர்க்காப்பீட்டு நிறுவனங்களுடன் பேச்சு நடத்தி ஏக்கருக்கு குறைந்தது ரூ.30 ஆயிரமாவது காப்பீடு பெற்றுத்தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்