ஓலா, உபேர்-க்கு பதிலாக புதிய செயலிகளை அரசே உருவாக்க வேண்டும்-ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கம் வலியுறுத்தல்
போக்குவரத்து துறை துணை ஆணையர் தலைமையில் ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கத்தினர் ஆலோசனை கூட்டம் கிண்டியில் நடைபெற்றது.;
சென்னை,
தமிழ்நாட்டில் பல ஆண்டுகளாக மீட்டர் கட்டணம் என்பது உயர்த்தப்படாமல் உள்ளது. இதனால் கட்டணத்தை உயர்த்தவேண்டும் என்று கடந்த 10 ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டுனர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். மேலும் அதிகரித்து வரும் ஓலா, உபேர் வாகனங்களின் பயன்பாட்டை குறைத்து இதற்காக அரசே தனியாக ஒரு செயலியை உருவாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வந்தனர். இதனால் தமிழக போக்குவரத்து துறை, ஸ்டார்ட் அப் டிஎன் மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து 'டாடோ' எனும் செயலியை உருவாக்கியது.
இந்நிலையில் போக்குவரத்து துறை துணை ஆணையர் தலைமையில் ஆட்டோ ஓட்டுனர்கள் தொழிற்சங்கத்தினர் ஆலோசனை கூட்டம் கிண்டியில் நடைபெற்றது. இதில் புதிய செயலி எவ்வாறு உருவாக்கப்பட்டது, அதனை உபயோகிப்பது எப்படி என்று விளக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் தனியாருடன் இணைந்து இந்த செயலியை உருவாக்கியதற்கு தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தனியார் நிறுவனத்தின் பங்களிப்பு இருந்தால் அதனை முறையாக செயல்படுத்த முடியாது என்று கூறினர். இதை ஏற்கனவே நாங்கள் தெரிவித்தபடி, குறைந்தபட்ச கட்டணமாக ரூ. 50 மற்றும் 1 கி.மீ தூரத்திற்கு ரூ.25 -ம் நிர்ணயிக்கப்பட்டு , அரசே செயலியை உருவாக்கினால் நாங்கள் கட்டணத்தை உயர்த்தாமல் ஆட்டோ ஓட்டுவதாக கூறினர்.
இதுகுறித்து ஏ.ஐ.டி.யூ.சி சங்க நிர்வாகி கூறும் போது, ஓலா, உபேர் செயலிகளுக்கு மாற்றாக நாங்கள் புதிய செயலியை உருவாக்க கூறி தொடர்ச்சியாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறோம். ஆனால் இன்று ஓலா, உபேர் நிறுவனத்தை தவிர்த்து புதிய நிறுவனத்தை அரசு கொண்டு வருகிறது. இதனை அனைத்து தொழிற்சங்கங்களும் எதிர்க்கிறோம். நாங்கள் கூறும் செயலியை உருவாக்க அரசுக்கு அனைத்து வாய்ப்புகளும் உள்ளன. ஆட்டோ நலவாரியத்தில் உள்ள நிதியை பயன்படுத்தி இந்த செயலியை உருவாக்கவேண்டும்.
மேலும் மீட்டர் கட்டணம் உயர்த்தபட்டு 12 ஆண்டுகள் ஆகிவிட்டன. எனவே விலைவாசி உயர்வை கணக்கில் கொண்டு மீட்டர் கட்டணம் உயர்த்தப்பட வேண்டும் , என்ற பல்வேறு கோரிக்கைகளை வைத்துள்ளோம், என்று அவர் கூறினார்.